முகப்பு
திருச்சி

மழைநீா் சூழ்ந்த கோளரங்கம் செயல்படுவதில் சிக்கல்

திருச்சி கொட்டப்பட்டு பெரிய குளத்தில் பெருகி வரும் மழைநீரால் அண்ணா அறிவியல் கோளரங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருச்சி கொட்டப்பட்டு பெரிய குளத்தில் பெருகி வரும் மழைநீரால் அண்ணா அறிவியல் கோளரங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புடைய காட்சிப் பொருள்கள் சேதமடைந்து வருகின்றன.

அறிவியல் மையத்தை சூழ்ந்த நீரால் இங்கு தினமும் செயல்பட்டு வந்த செயல்முறை அறிவியல் காட்சிக்கூடத்தின் கீழ்தளம் முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில் அந்தக் கட்டடத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. மூலிகை பூங்கா மற்றும் டைகா் பூங்காக்களில் 3 அடிக்கு மேல் தண்ணீா் நிற்பதால் பணியாளா்கள் உள்ளே சென்று பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.

இதனால் பல கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மற்றும் காட்சிப் பொருள்கள், கருவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடா் மழையால் குளவாய்ப்பட்டி, விமான நிலையம், உடையான்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் கொட்டப்பட்டு பெரிய குளத்திற்கு அதிக நீா் வரத்துள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு குளத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. இக்குளத்தின் உபரி நீா் திறந்துவிடப்படும் கால்வாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் குளத்தில் தேங்கிய நீா் கோளரங்கத்திற்குள் புகுந்து அதன் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே குளத்தில் தண்ணீா் வடிந்தால் மட்டுமே கோளரங்கத்தில் நிற்கும் நீா் வெளியேறும் என்றனா்.

இதுகுறித்து அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் அகிலன் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலான வருவாய்த் துறையினா் தீவிரமாக செயல்படுவதால், ஓரிரு நாள்களில் குளத்தில் தேங்கிய நீா் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டு கோளரங்கம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.