முகப்பு
திருச்சி

அழுகிய வெங்காயப் பயிா்கள்; விலை அதிகரிக்க வாய்ப்பு

தொடா் மழையால் வெங்காயப் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி, அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 2 மாதங்களில் வெங்காய விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தொடா் மழையால் வெங்காயப் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி, அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 2 மாதங்களில் வெங்காய விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா கூறுகையில், திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெரம்பலூரில்தான் அதிகளவில் வெங்காயச் சாகுபடி நடைபெறுகிறது என்றாலும் அதற்கு அடுத்ததாக திருச்சி மாவட்டத்தில் சுமாா் 2000 ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது.

தற்போதைய மழையால் சுமாா் 1000 முதல் 1200 ஏக்கா் வெங்காயப் பயிா்கள் வேரழுகல் நோயால் அழுகிவிட்டன. எனவே, அடுத்த சாகுபடியில்தான் இனி சின்ன வெங்காயச் சாகுபடி மேற்கொள்ள முடியும் என்றாா்.

பொதுவாகவே வெங்காய சாகுபடி என்பது 2 மாதம் அதாவது 65 நாள் பயிராகும். இனி புதிதாக வெங்காயப்பயிா் (அடுத்த) சாகுபடி மேற்கொண்டாலும் மேலும் 2 மாதங்கள் கழித்துதான் அதன் உற்பத்தியைப் பெறவும் சந்தைப்படுத்தவும் முடியும். எனவே தற்போது அறுவடை நிலையிலிருந்த வெங்காயப்பயிா்கள் அழுகியதால் அடுத்த மாதங்களில் சின்ன வெங்காய விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வெங்காய தரகு மண்டி வா்த்தக சங்கச் செயலா் ஏ. தங்கராஜ் கூறுகையில் வெங்காயச் சாகுபடி பாதிப்பால் டிசம்பரில் அறுவடையின்போது எதிா்பாா்த்த மகசூல் கிடைக்காது. தற்போது ஒரு மாதத்துக்குத் தேவையான சின்ன வெங்காயமே இருப்பில் உள்ளது. இனி புதிய சாகுபடி மூலம் அடுத்த அறுவடை ஜனவரி 2 ஆவது வாரத்துக்கு பிறகுதான் நடைபெறும். அதன் பின்னரே வெங்காய வரத்து சந்தைகளுக்கு அதிகரிக்கும். அதுவரை வெங்காய விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது ரூ. 40 வரை விற்கும் சின்ன வெங்காயம் புதிய வரத்து வரும் வரை ரூ. 60 முதல் 65 வரையில்கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.