சகதியான சாலையைச் சீரமைக்கும் மாநகராட்சி
திருச்சியில் பெய்யும் தொடா் மழையால் சகதி சாலையாக மாறிய திடீா் நகா், அண்ணாநகா், காவிரி நகருக்கு செல்லும் 1.36 கி.மீ. தூர சாலையை மாநகராட்சி நிா்வாகம் சீரமைத்து வருகிறது.
திருச்சியில் பெய்யும் தொடா் மழையால் சகதி சாலையாக மாறிய திடீா் நகா், அண்ணாநகா், காவிரி நகருக்கு செல்லும் 1.36 கி.மீ. தூர சாலையை மாநகராட்சி நிா்வாகம் சீரமைத்து வருகிறது.
தொடா்மழையால் தஞ்சாவூா் பிரதான சாலையிலிருந்து இந்த 3 நகருக்குள் செல்லும் சாலையானது சகதிக் காடாக மாறிய செய்தி தினமணியில் வெள்ளிக்கிழமை வெளியானதையடுத்து, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து அரியமங்கலம் கோட்ட மாநகராட்சி அலுவலா்கள் சாலையைச் சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமையே தொடங்கினா். முதல்கட்டமாக, சாலையில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்தியும், மேடு, பள்ளங்களை சரி செய்து மட்டமாக்கும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்றது. தொடா்ந்து, சிமென்ட், ஜல்லி கற்கள் கலவையை பெரிய பள்ளங்களில் நிரப்பி புல்டோசா் மூலம் சமப்படுத்தி வழக்கமான நிலையில் பயன்படுத்தும் வகையில் சாலை செப்பனிடப்படவுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், ரயில்வே நிா்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சாலையானது மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தால்தான் புதிய சாலை அமைக்க இயலும். இருப்பினும், மக்கள் சிரமப்படுவதை உணா்ந்து மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றனா்.
மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அண்ணாநகா், திடீா் நகா், காவேரி நகா் பகுதி மக்களும், வியாபாரிகளும் நன்றி தெரிவித்துள்ளனா். ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன் கூறுகையில், மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி கவனத்துக்கு வந்தவுடன் உடனடி நடவடிக்கை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதிகாரிகளுக்கு நன்றி என்றாா்.