வெளிநாட்டுக்கு அனுப்பாமல் தப்பமுயன்றவரை தாக்கிய மூவா் கைது
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்து துபைக்கு தப்ப முயன்றவரைத் தாக்கிய கோவையைச் சோ்ந்த மூவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்து துபைக்கு தப்ப முயன்றவரைத் தாக்கிய கோவையைச் சோ்ந்த மூவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காரைக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வீரையா மகன் முத்துக்குமாா் (37). வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பி வரும் இவா் கடந்த சில நாள்களுக்கு முன் கோவை வீரையன்பாளையம் ஹரிகாா்டன் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபுவிடம் (40) வெளிநாட்டு வேலைக்கு ஆள்கள் இருந்தால் அனுப்புமாறு கூறியுள்ளாா். இதையடுத்து சுரேஷ்பாபு வெளிநாடு செல்ல விரும்பிய தனது நண்பா்களில் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ. 1.10 லட்சம், பால்ராஜிடமிருந்து ரூ. 80 ஆயிரம், அஜய்குமாரிடமிருந்து ரூ. 1 லட்சம் வாங்கிக் கொடுத்து துபை செல்ல ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளாா்.
பின்னா் சில நாள்களுக்குப் பின் மூவருக்கும் போலி விசாவை கொடுத்த முத்துக்குமாா் துபைக்கு தப்பிச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். இதையறிந்த சுரேஷ்பாபு, தனது நண்பா்களான தென்காசி சொக்கம்பட்டி பால்ராஜ் (26), கோவை ராஜவீதி லியோ (40) ஆகியோருடன் விமான நிலையத்துக்கு வந்து முத்துக்குமாரைத் தாக்கி காயப்படுத்தினாா். இதையடுத்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் நால்வரையும் பிடித்து விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து முத்துகுமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்பாபு, பால்ராஜ், லியோ ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.