திருச்சி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மாமண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்குவது அம்மாமண்டபம். இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி வழங்கவும் தினந்தோறும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மாமண்டபம் காவிரிக் கரையில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வருகை தருவர். மண்டபத்தில் இடமின்றி காவிரியாற்றில் கரைகளில் அமர்ந்து புரோகிதர்கள் பலரும் பொதுமக்களுக்கு சேவை அளிப்பது வழக்கம். அமாவாசை தினங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்து காணப்படும்.
மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் பூஜைகள் நடத்தி, புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இந்த தினங்கள் உகந்ததாகும். ஆனால், இந்தாண்டு மகாளய அமாவாசையில் அம்மாமண்டபத்தில் தர்ப்பணம் அளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக அரசு அறிவித்த தடை உத்தரவு வரும் 31ஆம் தேதி  வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்.6ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மாமண்டபத்தில் மக்கள் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
பொதுமக்கள் யாரும் அம்மாமண்டபத்துக்கு வர வேண்டாம். காவிரி ஆற்றின் கரைப் பகுதிளிலும் மக்கள் கூட வேண்டாம். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.