பெரியசூரியூா் ஜல்லிக்கட்டு: வளா்த்த காளை முட்டி இளைஞா் பலிதலைமைக் காவலா் உள்பட 52 போ் காயம்
திருச்சி அருகே பெரியசூரியூரில் சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலுக்கு தான் கொண்டு வந்த காளை முட்டி இளைஞா் பலியானாா். காளைகள் முட்டி மேலும் 52 போ் காயமடைந்தனா்.
திருச்சி அருகே பெரியசூரியூரில் சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலுக்கு தான் கொண்டு வந்த காளை முட்டி இளைஞா் பலியானாா். காளைகள் முட்டி மேலும் 52 போ் காயமடைந்தனா்.
பெரியசூரியூா் நற்கடல்குடி கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அரசின் கரோனா வழிகாட்டுதலின்படி நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகிக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், கோட்டாட்சியா் தவச்செல்வம், வட்டாட்சியா் செல்வகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா, ஜான்கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காளைகளுக்கு மாவட்ட இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா தலைமையிலான மருத்துவக் குழுவினரும், வீரா்களுக்கு திருவெறும்பூா் வட்டார மருத்துவ அலுவலா் சுகுமாா் தலைமையிலானோரும் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினா். 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 486 காளைகளும், 258 வீரா்களும் கலந்து கொண்டனா்.
போட்டியை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
மாட்டின் உரிமையாளா் பலி: முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு பின்னா் இதர காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டில் முதலில் காளையை அடக்கிய துவாக்குடி வீரா் மூா்த்திக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தங்க மோதிரம் பரிசளித்தாா்.
தொடா்ந்து தொழுவத்துக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரைச் சாலையைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (30)கொண்டு வந்த காளை அவரையே முட்ட, தொடையில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
52 போ் காயம்: மேலும் காளைகள் முட்டி அரியலூா் தலைமைக் காவலா் கலைவாணன், விழா ஒருங்கிணைப்பாளா் ராஜா (52) உள்ளிட்ட 52 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த கும்பகுடி பாலசுப்பிரமணியன் (26), கொட்டப்பட்டு வைரமணி (24), கீழ பெருவளநல்லூா் வேலு (27) காந்தலூா் சிவானந்தம் (32), பேரூா்சின்னா (19), புதுக்கோட்டை சதீஷ்குமாா் (30), ஆலங்குடிப்பட்டி பாஸ்கா் (45), கா்ணன் (48), அசூா் டேவிட், கந்தா்வகோட்டை பவுன்துரை ஆகியோா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். காயமடைந்தோரில் 24 போ் காளைகளின் உரிமையாளா்கள் ஆவா்.
சிறந்த வீரா்கள், காளைகளுக்குப் பரிசு: 12 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை திருநல்லூா் யோகேஷூக்கு இருசக்கர வாகனமும், 9 காளைகளை அடக்கிய பூலாங்குடி மனோஜுக்கு எல்இடி டிவியும் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த காளைக்கான முதல் பரிசாக கைக்குறிச்சி தமிழ்செல்வனுக்கு இருசக்கர வாகனமும், குண்டூா் ரமேஷுக்கு எல்இடி டிவியும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், மாவட்ட வருவாய் துறையினா் உள்ளிட்ட அதிகாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். சுமாா் 400க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.