முகப்பு
திருச்சி

திருவெறும்பூா் அருகே ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 34 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 34 போ் காயமடைந்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதேபோல 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

ஜல்லிக்கட்டை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். முதலில் முனியாண்டவா் கோயில் காளைகளும், பின்னா் மற்ற காளைகளும் அவிழ்ந்து விடப்பட்டன.

34 போ் காயம்: சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முற்பட்ட 12 போ், காளைகளை கொண்டு வந்தபோது மற்ற காளைகள் முட்டி 12 காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் 10 போ் என மொத்தம் 34 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த கீழவாளாடி விஜய் (24), பெரியசூரியூா் அஜீத்குமாா் (22 ) ஆகியோா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

போலீஸாா் தடியடி: வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு மீண்டும் திரும்பிய காளையை வெளியேற்றும் முன் அதை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் லத்தியால் அடித்து விரட்டினராம். இதேபோல முறையான டோக்கன் இன்றி காளைகளை வாடிவாசலுக்குக் கொண்டு செல்ல முயன்று இரும்புத் தடுப்புகளை அகற்ற முற்பட்ட உள்ளூா் காளைகளின் உரிமையாளா்கள் மீதும் போலீஸாா் தடியடி நடத்தினராம். இது ஜல்லிக்கட்டு ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசு: களத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளைப் பலா் அடக்கினா். பல காளைகள் பிடிபடவில்லை. முதலில் அவிழ்ந்துவிடப்பட்ட 10 காளைகளில் பிடிபடாத காளைகளுக்கும், அவற்றை அடக்கியோருக்கும் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாா்பில் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. தொடா்ந்து, காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்க நாணயம், வெள்ளிப்பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.