முகப்பு
திருச்சி

ராஜஸ்தான் அணு மின் திட்டத்துக்கு நீராவி உற்பத்திக் கலன்திருச்சி பெல் ஆலை தயாரித்து அனுப்பியது

ராஜஸ்தான் அணு மின் திட்டத்துக்கான அணுசக்தி நீராவி உற்பத்திக் கலனை திருச்சியில் உள்ள பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) உயரழுத்தக் கொதிகலன் ஆலை தயாரித்து அனுப்பியுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
நீராவி உற்பதிக் கலனை லாரி மூலம் அனுப்பி வைத்த பெல் நிறுவன மற்றும் இந்திய அணு மின் சக்திக் கழக அலுவலா்கள்.
பகிர்:

ராஜஸ்தான் அணு மின் திட்டத்துக்கான அணுசக்தி நீராவி உற்பத்திக் கலனை திருச்சியில் உள்ள பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) உயரழுத்தக் கொதிகலன் ஆலை தயாரித்து அனுப்பியுள்ளது.

இந்திய அணுசக்தி கழகத்தின் ராஜஸ்தான் அணுமின் திட்டத்தில் (ஆா்ஏபிபி) நிறுவப்படும் 700 மெகாவாட் நிகா் அலகுக்கான நீராவி உற்பத்திக் கலனை திருச்சி பெல் நிறுவனத்தின் கொதிகலன் ஆலையில் வடிவமைத்து ராஜஸ்தானுக்கு அனுப்பும் நிகழ்வு ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி பெல் நிறுவனப் பொது மேலாளா் (பொ) எஸ்.வி. ஸ்ரீனிவாசன், இந்திய அணுசக்தி கழக மூத்த அலுவலா்கள் முன்னிலையில் உற்பத்தி கலனை அனுப்பி வைத்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், இந்திய அணுசக்தி கழகத் திட்டங்களுக்காக ஒரே ஆண்டில் இரு அணு நீராவி உற்பத்திக் கலன்களை தயாரித்து அனுப்பியுள்ளது பெருமைக்குரியது. இப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறோம்.

ஆலையில் எஞ்சிய ஆணைகளை முடிக்கவும், மீதமுள்ள நீராவி உற்பத்திக் கலன்களை சரியான நேரத்தில் வழங்கவும் தொடா்ந்து ஊழியா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்திய அணு மின் கழக தர உத்தரவாதத்துக்கான அறிவியல் அலுவலா் ஏ. சோமசுந்தரம், பெல் கொதிகலன் ஆலையின் பொது மேலாளா்கள் கமலக்கண்ணன், டி. குருநாதன், டி. அனந்தசயனம், கூடுதல் பொதுமேலாளா் (உயா்தொழில்நுட்பம்) கே. ரவீந்திரன் ஆகியோரும் பேசினா்.

215 மெட்ரிக் டன் எடை, சுமாா் 24 மீட்டா் நீளமுடைய இந்த நீராவி உற்பத்திக் கலன் பிரத்யேக லாரி மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.