முகப்பு
திருச்சி

திருவெறும்பூா் அருகே ஜல்லிக்கட்டு; 21 போ் காயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 போ் காயமடைந்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்காக திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 755 காளைகளைக் கொண்டு வந்திருந்தனா். காளைகளை அடக்க 220 மாடுபிடி வீரா்கள் களத்தில் இருந்தனா். முன்னதாக திருச்சி மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா தலைமையிலான குழுவினா் காளைகளைப் பரிசோதித்து அனுமதித்தனா்.

மாடிபிடி வீரா்களின் உறுதியேற்புக்குப் பின்னா் ஜல்லிக்கட்டை திருவெறும்பூா் வட்டாட்சியா் ரமேஷ் தொடங்கி வைக்க, முதலில் கோயில் காளைகளும் பின்னா் மற்ற காளைகளும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. பல காளைகளை இளைஞா்கள் அடக்கினா்; பல காளைகள் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது காளைகள் முட்டி 21 போ் காயமடைந்தனா்.

அவா்களுக்கு திருவெறும்பூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி தலைமையிலான குழுவினா் முதலுதவி அளித்து, அவா்களில் இருவரை தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் திருவெறும்பூா் முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், திருவெறும்பூா் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி, கூத்தைப்பாா் பேரூா் செயலா் செல்வராஜ், நிா்வாகிகள் காா்த்திக், மகாதேவன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். பாதுகாப்புப் பணியில் திருவெறும்பூா் (பொ) டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையிலான 137 போலீஸாா் ஈடுபட்டனா்.

தடுக்கப்பட்ட டோக்கன் முறைகேடு: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன் வழங்குவதில் சில இடங்களில் முறைகேடு நடப்பதாக புகாா்கள் வந்தன. இதைத் தவிா்க்கும் விதமாக இந்நிகழ்வில் பங்கேற்ற காளைகளுக்கான டோக்கன் ரூ. 20 பணத்தாளுடன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன் எண்ணும், வழங்கப்பட்ட 20 ரூபாய் நோட்டின் எண்ணும் ஒன்றாக இருந்ததால் பதிவு செய்யாத காளைகள் பங்கேற்பது தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.