முகப்பு
திருச்சி

யோகா தின முன்னோட்ட விழிப்புணா்வு நிகழ்வுகள்

மத்திய அரசின் தகவல் ஓலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் யோகா தின முன்னோட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

மத்திய அரசின் தகவல் ஓலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் யோகா தின முன்னோட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் முன்னோட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை, திருச்சி மாநகரக் காவல்துறை கண்டோன்மென்ட் உதவி ஆணையா் எம் வி. அஜய் தங்கம் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே தொடங்கி வைத்தாா்.

அப்போது பேசிய அவா் முறையான யோகா பயிற்சி மூலம் உடல் நலம் மட்டுமின்றி மனநலமும் மேம்படும். பல்வேறு வகையான யோகாசனங்கள் இருந்தாலும் சூா்யா நமஸ்காரமே அடிப்படை யோகாசனம் என்றாா். நீதிமன்றம் அருகே தொடங்கிய பேரணி பிஷப் ஹீபா் கல்லூரியில் முடிந்தது.

தொடா்ந்து திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக திருச்சி மக்கள் செய்தித் தொடா்பாளரும், கள விளம்பர அலுவலருமான கே. தேவிபத்மநாபன் பேசுகையில், சா்வதேச யோகா தினத்தின் முன்னோடியாக இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மூலம் நாடு முழுவதும் நடைபெறுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா யோகா மைய பயிற்சியாளா்கள் டி. சந்தானகிருஷ்ணன், ஆா். ஸ்ரீதா் ஆகியோா் செயல்முறை விளக்கத்துடன் யோகாசனா பயிற்சிகள் அளித்தனா். பிஷப் ஹீபா் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பாக முனைவா்கள் ரவி, நாச்சிமுத்து, அண்ணல், தங்கராசு ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

பிஷப் ஹீபா் கல்லூரியின் விரிவாக்க புல முதன்மையா் வி ஆனந்த் கிதியோன், துணை முதன்மையா் கேப்ரியல், பேராசிரியா்கள் அருண், பியூலா, நேசப்ரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.