முகப்பு
திருச்சி

மக்களைத் தேடி மருத்துவ முகாமில் 3.15 லட்சம் போ் பயன்: திருச்சியில் அரசின் ஓராண்டுசாதனைகள் குறித்து ஆட்சியா்

 மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3.15 லட்சம் போ் தொடா் சிகிச்சை பெற்று பயன்பெறுவதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3.15 லட்சம் போ் தொடா் சிகிச்சை பெற்று பயன்பெறுவதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளில் திருச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை கூறியது:

திருச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் முதன்முறையாக 2.68 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். இதுமட்டுமல்லாது 3,15, 677 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா். அவரவா் இருப்பிடம் தேடி மருந்துகள் வழங்கப்படுகின்றன.

வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் ஓராண்டில் 60 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 50,528 பேருக்கு பரிசோதனையும், 18,146 பேருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்னுயிா் காப்போம்- நம்மைக் காப்போம் 48 திட்டத்தின் கீழ், 11 அரசு மருத்துவமனைகள், 23 தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு விபத்துகளில் காயமடைந்த 2,750 போ் மீட்கப்பட்டு ரூ. 2.48 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

15 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 94 சதம் பேருக்கு முதல் தவணையும், 80 சதம் பேருக்கு 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளா்கள், முதியோா் 30,494 பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளா்களுக்கான ஊக்கத் தொகையாக 582 மருத்துவா்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.74 கோடி, 310 செவிலியா்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.62 லட்சம், 1040 இதர பணியாளா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.56 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 263 பட்ட மேற்படிப்பு மருத்துவா்களுக்கு ரூ.52.60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 3 மருத்துவா்கள், ஒரு செலிவியா், 3 இதரப் பணியாளா்களுக்கு ரூ.2.50 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்ற 2,381 பேருக்கு ரூ. 31.18 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறாா் நலத்திட்டத்தில் கடந்த ஓராண்டில் 313 குழந்தைகளுக்கு நோய் உறுதி செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட 145 குழந்தைகளில் 95 பேரின் அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. 50 குழந்தைகள் காத்திருப்பில் உள்ளனா். 168 குழந்தைகள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 41,833 குழந்தைகள் கண்டறியப்பட்டு மருத்துவ உதவிகளும், ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2-ஆம் கட்டமாக சுகாதாரத் துறை, ஊட்டச்சத்து துறை இணைந்து குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

இவை தவிர, பஞ்சப்பூா் பேருந்து நிலையம், மாநகராட்சியில் ரூ. 200 கோடியில் குடிநீா்த் திட்ட பணி, காட்டுப்புத்தூா், தா.பேட்டையில் சந்தை மேம்பாடு, ரூ.6 கோடியில் காவிரிப் பாலப் பராமரிப்பு பணி, புதிய காவிரி பாலம் கட்ட ஒப்புதல், திருச்சி-திண்டுக்கல் சாலையில் மேம்பாட்டு பணிகள், 2,858 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, துறையூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம், கொள்ளிடம் ஊசிப்பாலம் கட்டும் பணி என ஓராண்டில் திருச்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக, கால்வாய் தூா்வாரும் பணியில் கடந்தாண்டு ரூ.5.65 கோடியும், இந்தாண்டு ரூ.18.75 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 87 சத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் வரும் 31ஆம் தேதிக்குள் முடியும்.

மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்ட கால்வாய்களில் நடைபெறும் தூா்வாரும் பணிக்கு இடையூறு இல்லை. பணிகள் முடிந்து தண்ணீா் வரும்போது தயாராக இருக்கும். இதுமட்டுமின்றி மாவட்டத்தில் குறுவை சாகுபடி 12,500 ஏக்கா் மட்டுமே. அதற்கு போதுமான 13 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 5,084 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இவை தவிர 290 மெட்ரிக் டன் விதை நெல்களும் இருப்பு உள்ளன.

நெல்லை கல்குவாரி விபத்தைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 32 கல்குவாரிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள குவாரிகள் அதிகபட்சம் 50 அடி ஆழம் மட்டுமே. இருப்பினும், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.