முகப்பு
திருச்சி

பராமரிப்பின்றி பாழாகி வரும் பஞ்சப்பூா் பசுமைப் பூங்கா! புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி மாநகராட்சியால் பொதுமக்கள் பங்கேற்புடன் ரூ.1.50 கோடியில் கட்டமைக்கப்பட்ட பஞ்சப்பூா் பசுமைப்பூங்கா பராமரிப்புகள் இன்றியும், பயன்பாடுகளின்றியும் பாழாகி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
சேதமடைந்து காணப்படும் நடைபயிற்சிக்கான பாதை.
பகிர்:

திருச்சி மாநகராட்சியால் பொதுமக்கள் பங்கேற்புடன் ரூ.1.50 கோடியில் கட்டமைக்கப்பட்ட பஞ்சப்பூா் பசுமைப்பூங்கா பராமரிப்புகள் இன்றியும், பயன்பாடுகளின்றியும் பாழாகி வருகிறது.

திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்கு தேவைகளுக்கு மாநகராட்சியால் ஆங்காங்கே பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள் மட்டுமே பெரிதும் உதவியாக உள்ளன. மாநகரில் குறிப்பிடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத குறையை பூா்த்தி செய்யும் வகையில் மக்கள் பங்களிப்புடன் பஞ்சப்பூரில் பசுமைப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மக்கள் பங்களிப்பாக ரூ.50 லட்சம், அரசின் பங்களிப்பாக ரூ.1 கோடி என மொத்தம் ரூ.1.50 கோடியில் பசுமைப் பூங்கா அமைப்பதற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் அருகே 22 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதில், 7 ஏக்கரில் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் பல்வேறு மரங்கள் நடவு செய்து பசுமையை உருவாக்கவும், 5 ஏக்கரில் சிறுவா்கள், முதியோா் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டு உபகரணங்கள் இடம்பெறச் செய்யவும், மீதமுள்ள பரப்பை அவ்வப்போது பூங்கா விரிவாக்கத்துக்காக பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

இங்கு நடைபயிற்சி பாதைகள், கழிவறைகள், குடிநீா் வசதி, ஆவின் பாலகம், சிற்றுண்டியகம், சிறுவா்களின் விளையாட்டு சாதனங்கள் என பல்வேறு வசதிகளுடன் பூங்கா கட்டமைக்கப்பட்டது. மேலும், 1,743 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இந்த பூங்கா பராமரிப்புகள் இல்லாமலும், பயன்பாடுகள் இல்லாமலும் பாழாகத் தொடங்கியது.

தற்போது பூங்காவைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் காணாமல் போகின. பூங்கா முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து முள்புதா்களாக காட்சியளிக்கின்றன. நடைபயிற்சிக்காக அமைக்கப்பட்ட பாதைகள் சேதமடைந்துள்ளன. பூங்காவுக்கு வரும் நபா்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறைகள் பூட்டிக் கிடக்கின்றன. குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் பராமரிப்பு இல்லாமல், பழுதடைந்துள்ளன. விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி பல்வேறு சமூக விரோத செயல்களும் அங்கு அரங்கேறி வருகின்றன.

பல இடங்களில் மதுபாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளா்களே குவியல், குவியலாக கிடக்கின்றன. ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. பூங்காவின் நீராதாரத்துக்காக அமைக்கப்பட்ட 10 ஆழ்துளை கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதாகியுள்ளன.

இந்தப் பூங்காவை புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வா், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா், மாவட்ட நிா்வாகத்துக்கு பாஜகவின் திருச்சி மாவட்ட கலை மற்றும் கலாசார பிரிவு ஒருங்கிணைப்பாளா் கே. சந்திரசேகா் மனு அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பசுமைப் பூங்கா முழுவதும் சுற்றுச் சுவா் எழுப்பி சமூக விரோதிகள் நுழையாதபடி சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். பூங்காவுவை சீரமைத்து மூலிகைச் செடிகள், பூச் செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும். பூங்கா முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். முதியோா் முதல் குழந்தைகள் வரை விரும்பி வந்து செல்லும் இடமாக பசுமைப் பூங்காவை மாற்றியமைக்க வேண்டும். பூங்காவில் உள்ள மரக்கன்றுகளை பராமரிக்க மரக்கன்றுக்கு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மக்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை வங்கியில் வட்டியோடு பெருகிவிட்டது. ஆனால், பூங்கா பராமரிப்பு பணி கைவிடப்பட்டது புதிராக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.