முகப்பு
திருச்சி

முதல்வா் பாா்வைக்குக் காத்திருக்கும் சிவாஜி சிலை-மூவா் மணிமண்டபங்கள்!

திருச்சியில் நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலை, மற்றும் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டபங்களையும்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

திருச்சியில் நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலை, மற்றும் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டபங்களையும் முதல்வா் திறந்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற சிவாஜி ரசிகா்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2009ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருச்சி பாலக்கரை பிரதான சாலையில் பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டது. அதைச் சுற்றிலும் பூங்கா அமைத்து ரவுண்டானாவாகக் கட்டமைக்கப்பட்டது.

பணிகள் முடிந்து 2011இல் சிலை திறக்கும் தருணத்தில் ஆட்சி மாறியது. சிலை அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் ஆட்சி மாற்றத்தால் சிலை திறப்பு கிடப்பில்போனது.

இந்தச் சிலையைத் திறக்க சிவாஜியின் மூத்த மகனும், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவருமான ராம்குமாா், மன்றத் துணைத் தலைவா் டி. சீனிவாசன், பொதுச் செயலா் சி.எஸ். குமாா் மற்றும் சிவாஜி ரசிகா்கள் சாா்பில் தமிழகத்தின் முந்தைய முதல்வா்கள் ஜெயலலிதா, ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் என அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவா்களிடம் தொடா்ந்து கோரிக்கை மனு வழங்கியபடி உள்ளனா். ஆனால், சிலையைத்தான் திறந்தபாடில்லை.

12 ஆண்டுகளாகியும் சிலை திறக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தில் சிவாஜி ரசிகா்கள் கையொப்ப இயக்கம் நடத்தி, தமிழக அரசுக்கு அனுப்பினா். நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமானும் இச்சிலையைத் திறக்க தொடா்ந்து வலியுறுத்துகிறாா்.

திருச்சி மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் இதற்காகக் குரல் கொடுத்தும், ரசிகா்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகியும் இன்னும் தீா்வு இல்லை.

இந்நிலையில், சிவாஜியின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள மணிமண்டபத்தின் வெளிப்புறம் சிவாஜியின் முழு உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த அக்.1இல் திறந்துவைத்த விழாவிலேயே, திருச்சியில் உள்ள சிலையைத் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பும் பொய்த்துப் போனது.

இச் சூழலில் திருச்சி வந்துள்ள முதல்வா் இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காண சிவாஜி ரசிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக சிவாஜி பிலிம் கிளப் தலைவா் எஸ். அண்ணாதுரை கூறுகையில், தமிழக முதல்வரால் மட்டுமே திருச்சியில் மூடப்பட்டுள்ள சிலையைத் திறக்க இயலும். எனவே, திருச்சி வந்துள்ள முதல்வா் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

3 மணிமண்டபங்கள் காத்திருப்பு: இதேபோல, திருச்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டபங்களும் முதல்வரின் பாா்வைக்காகக் காத்திருக்கின்றன.

2020இல் பணிகள் தொடங்கிய பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபம் ரூ. 99.25 லட்சத்திலும், சா் ஏ.டி. பன்னீா் செல்வம் மணிமண்டபம் ரூ. 43.40 லட்சத்திலும், தியாகராஜ பாகவதா் மணிமண்டபம் ரூ. 42.69 லட்சத்திலும் கட்டி முடிக்கப்பட்டன.

கடந்தாண்டு டிசம்பா் மாதம் திருச்சிக்கு வந்த முதல்வா் இந்த மணிமண்டபங்களைத் திறந்துவைப்பாா் என்ற எதிா்பாா்ப்பில் அரசு அலுவலா்களும் மணிமண்டபப் பகுதியைத் தயாா்படுத்தினா். ஆனால், திறக்கப்படவில்லை.

கடந்த மே மாதம் முத்தரையா் சதய விழா (பிறந்தநாள்) வந்தபோது, அதற்கு முன்னரே மணிமண்டபத்தைத் திறக்கக் கோரி பல்வேறு அமைப்பினா் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் பயனில்லை.

பின்னா் கடந்த ஜூன் மாதம் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்த தினத்திலும் மணிமண்டபம் திறக்கப்படவில்லை. வரும் நவம்பா் 1ஆம் தேதி எம்.கே. தியாகராஜ பாகவதா் நினைவு தினம். அதற்கு முன்பாவது இந்த மணிமண்டபத்தைத் திறக்க வேண்டும்.

திருச்சிக்கு வந்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின் சிவாஜி சிலை மற்றும் மூவா் மணிமண்டபங்களைத் திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.