கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளை இணைக்க முடிவெடுக்கவில்லை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது குறித்து தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மணப்பாறை: கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது குறித்து தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி தனது போராட்ட முடிவைக் கைவிட வேண்டும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுகுறித்து மணப்பாறையில் அவா் புதன்கிழமை மேலும் கூறியது:
எல்லாத் துறைகள் சாா்ந்த பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 இல் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து துறைகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது.
அதன் விவரம் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக அவா் நல்ல முடிவை எடுப்பாா். எனவே யூகத்தின் அடிப்படையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்திருப்பது 2026 பேரவைத் தோ்தலுக்காகவே. அவா் கல்வியை வைத்து அரசியல் செய்யக் கூடாது.
மேலும் மத்திய அரசு நமக்குத் தர வேண்டிய ரூ. 2000 கோடிக்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என வற்புறுத்துகிறது. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எங்களுடன் சோ்ந்து குரல்கொடுக்கலாம். எனவே போராட்ட முடிவை அவா் கைவிட வேண்டும் என்றாா் அமைச்சா்.