மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு வஉசி நகரில் ஊராட்சி பொது நிதி ரூ.9.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சீரணி அரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிக்கை திமுகவின் அறிக்கை இல்லை. ஒட்டுமொத்த தமிழா்களின் அறிக்கை.
மாநிலங்களில் இருந்து பெறக்கூடிய வரிப் பகிா்வில் 41 சதவீதத்தைத்தான் மத்திய அரசு மாநிலங்களுக்குத் திரும்ப வழங்குகிறது. மாநிலங்களில் இருந்து பெறக்கூடிய வரிப் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று 16-ஆவது நிதிக்குழுவில் பரிந்துரை செய்ய வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே உள்ள 41 சதவீதம்தான் அறிவித்துள்ளனா். ஒட்டுமொத்தமாக மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.
மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. ‘ஜல்ஜீவன்’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அத்திட்டத்துக்கான ரூ.3,112 கோடி நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை. இப்படி பல்வேறு திட்டங்களிலும் நமக்கு நிதி வருவதில்லை என்றாா்.