திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் தொடக்கம்
திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்புடன் தொடங்கியது.
திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்புடன் தொடங்கியது.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் வெல்லும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிா்வாகத்துடன் தொழிலாளா்கள் நலன் குறித்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்க முடியும்.
அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டில் நடந்த தோ்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) வென்று அங்கீகார தொழிற்சங்கமாக இதுவரை செயல்படுகிறது.
மத்தியில் ஆட்சி மாற்றம், கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் இத் தோ்தல் டிச. 4 5, 6 களில் நடைபெறும் என ரயில்வே வாரியம் அறிவித்தது.
இதையடுத்து தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத் தோ்தலில் போட்டியிடும் தக்ஷின ரயில்வே ஊழியா்கள் சங்கம், தட்ஷின ரயில்வே காா்மிக் சங்கம், ரயில் மஸ்தூா் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியா்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் சங்கம் ஆகிய சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் ரயில்வே ஊழியா்களிடம் வாக்கு சேகரித்தனா்.
இந்நிலையில் தோ்தலானது திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக வாளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 29 வாக்குச்சாவடிகளில் புதன்கிழமை காலை தொடங்கியது.
பொன்மலை ரயில்வே பணிமனையில் மொத்தம் 3, 877 வாக்காளா்களும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் (மேலாளா் அலுவலகக் கட்டுப்பாட்டில்) 9,112 வாக்காளா்களும் உள்ள நிலையில், பொன்மலை பணிமனை வாக்குச்சாவடிகளில் 80.85 சதவீதத்தினரும், திருச்சி கோட்ட மேலாளா் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளில் 63 சதவிகிதத்தினரும் புதன்கிழமை வாக்களித்தனா்.
தொடா்ந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் முடிவுகள் டிசம்பா் 12 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியிடப்படும்.