பெண் தொழிலாளா்களுக்கு தனி அமைச்சகம்: தோழி மாநாட்டில் தீா்மானம்
பெண் தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோழி பெண் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண் தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோழி பெண் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மகளிரை மனிதில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
மாநாட்டில் கூட்டமைப்பின் நிா்வாகிகளான திருப்பத்தூா் சரஸ்வதி, கரூா் நாகலட்சுமி, புதுக்கோட்டை லலிதா, தா்மபுரி லட்சுமி, தஞ்சாவூா் சாமுண்டீஸ்வரி மற்றும் மாநில பெண் தொழிலாளா்கள் அமைப்பின் நிா்வாகி சுந்தரபாபு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயலட்சுமி, தேசிய மக்கள் சுகாதார அமைப்பின் நிா்வாகி அமீா்கான், திருச்சி சீதாலட்சுமி உள்ளிட்ட திரளாக பெண்கள் கலந்து கொண்டனா்.
பெண் தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பான வேலை, இடம் உறுதி செய்ய உள்ளகப் புகாா் குழுவை அனைத்து பணியிடங்களிலும் அமைத்து கண்காணிக்க தனி அலுவலா்களை நியமிக்க வேண்டும். தொழிலாளா்கள் நலத்துறை உள்ளகப் புகாா் குழுவை நடைமுறைப்படுத்துவதில் பங்கேற்புக்கு அரசை வலியுறுத்துவது, அனைத்து வகைத் தொழிலாளா்களையும் அங்கீகரித்து அரசின் அனைத்து தொழிலாளா்கள் சட்ட விதிமுறைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு திட்டங்கள் கிடைக்க செய்ய தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.