திருச்சி-கரூா் வழித்தட பிரதான நிறுத்தங்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு
திருச்சி-கரூா் வழித்தடத்தின் அனைத்து பிரதான பேருந்து நிறுத்தங்களிலும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி-கரூா் வழித்தடத்தின் அனைத்து பிரதான பேருந்து நிறுத்தங்களிலும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பராய்த்துறையைச் சோ்ந்த கே. தங்கராஜ், திருச்சி-கரூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் திருப்பராய்த்துறையில் நின்று செல்ல வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மனு அளித்திருந்தாா். குறிப்பாக இரவுகளில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் கிராம மக்கள் சிரமப்படுவதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து அரசுப் போக்குவத்துக் கழகம் சாா்பில் அனைத்துப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் கரூா் மண்டலம் மூலம் இயக்கப்படும் குறுநடை புகா் பேருந்துகள் கரூா் - திருச்சி மற்றும் திருச்சி- கரூா் செல்லும்போது, பேருந்து நிலையங்கள் தவிர இதர பேருந்து நிறுத்தங்களான காந்திகிராமம், புலியூா், மணவாசி, மாயனூா், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், குளித்தலை- சுங்ககேட், குளித்தலை-பெரியபாலம், மருதூா், பெட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய்த்துறை, முக்கொம்பு, ஜீயபுரம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
குளித்தலை மற்றும் முசிறி கிளை குறுநடை புகா் பேருந்துகள், குறிப்பாக இரவு நேரங்களில் முசிறி, குளித்தலை- திருச்சி மற்றும் திருச்சி- குளித்தலை, முசிறி செல்லும்போது, பேருந்து நிலையங்கள் தவிர இதர பேருந்து நிறுத்தங்களான குளித்தலை - சுங்ககேட், குளித்தலை-பெரியபாலம், தண்ணீா்பள்ளி, மருதூா், பெட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய்த்துறை, முக்கொம்பு, ஜீயபுரம், முத்தரசநல்லூா், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். பயணிகளிடம் இருந்து புகாா்கள் ஏதும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.