முகப்பு
திருச்சி

சின்ன வெங்காயச் செடிகளில் திருகல் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:53 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி ஒருவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் தற்போது 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நிலவும் குளிா்ச்சியான தட்பவெட்பநிலை மற்றும் மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந்நோயானது கொலிட்டோடிரைக்கம் பியுசேரியம் மற்றும் ஆந்ரக்னோஸ் போன்ற பல்வகை பூஞ்சைகள் மூலம் தோன்றுகின்றது. இப்பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்கள் மடிந்து தொங்கும். வெங்காயத்தின் கழுத்துப்பகுதி நீண்டு, குமிழங்கள் சிறுத்து காணப்படும். தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும்.

இந்நோயானது 50 முதல் 100 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பிற்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. இருப்பினும், மற்றச் செடிகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இதற்கு இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை பாத்திகளாக அமைத்து அதில் 1 கிராம் டெபகோனசோல் மற்றும் ட்ரிப்லோக்சைட்ரபின், பூஞ்சான் கொல்லி 1 லிட்டா் நீரில் ஊற்றி கலந்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு தகுந்தாற்போல் தண்ணீா் மற்றும் மருந்தை அதிகப்படுத்தவும். ஒரு லிட்டா் தண்ணீருக்கு காா்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி 1 கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

மாற்றாக புரோபிகோனசோல் அல்லது ஹெக்சகோனசோல் இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாகத் தெளிக்கலாம். பத்து நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இப் பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை பெற்றது. எனவே, பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்துவிட வேண்டும். இது மண் மூலம் பரவக்கூடிய நோய் என்பதால் பயிா் சுழற்சி முறையைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் எனும் உயிரியல் கட்டுப்பாடு காரணியை 1 கிலோ எடுத்து 25 கிலோ மக்கிய எருவில் கலந்து 1 ஏக்கா் நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். மேலும், வெங்காயத்தை நடுவதற்கு முன்பு 5 கி. டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் ஒரு கிலோ வெங்காயத்தில் விதை நோ்த்தி செய்வதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வெங்காயத்தில் வரும் திருகல் நோய் பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →