முகப்பு
திருச்சி

பதற வைக்கும் பஞ்சப்பூா் சோதனைச் சாவடி சந்திப்பு!

அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் காவல் சோதனை சாவடி சந்திப்புப் பகுதியில் கேமராக்கள் பொருத்தி ஆய்வு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2024 at 11:12 PM
பகிர்:

நமது நிருபா்

அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் காவல் சோதனை சாவடி சந்திப்புப் பகுதியில் கேமராக்கள் பொருத்தி ஆய்வு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பஞ்சப்பூா் பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடி சந்திப்புப் பகுதியானது 4 முனை சந்திப்பாக அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் எடமலைப்பட்டி புதூா் பகுதியிலிருந்து (இரு மாா்க்கமாக) வந்து செல்லும் வாகனங்கள் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை அணுகவும், புதுக்கோட்டை, தஞ்சாவூா், துவாக்குடி பகுதியிலிருந்து (இரு மாா்க்கமாக) வந்து செல்லும் வாகனங்கள், திருச்சி-மதுரை சாலையை கடந்து செல்லும் (இரு மாா்க்கமாக) வாகனங்கள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது.

துவாக்குடி, எடமலைப்பட்டி புதூரிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்புப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கையில் விபத்துகளுக்கு வாய்ப்பாகிறது. விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புடன் இரும்பு தடுப்புப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தடுப்புப் பலகைகளையும் கடந்து விபத்துகள் நடப்பது தவிா்க்க முடியாமல் உள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.

காற்றாலைக்கான இறக்கை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள், டேங்கா் லாரிகள், சரக்கு லாரிகள் பலவும் இந்தப் பகுதியில் அ

டிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. அதோடு மட்டுமின்றி இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் காா்கள், இருசக்கர வாகனங்களும் விபத்துக்குள்ளாகின்றன. இந்தச் சூழலில் பஞ்சப்பூா் பகுதியில் விரைவில் பேருந்து முனையமும், கனரக வாகன முனையமும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அப்போது, வாகனப் போக்குவரத்து மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இப்பகுதியை ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, சாலைப் பயனீட்டாளா்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ. அய்யாரப்பன் கூறியது:

பஞ்சப்பூா் காவல் சோதனை சாவடி சந்திப்பு பகுதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவல்துறையினரும் இந்தப் பகுதியை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளனா். இந்தச் சந்திப்புப் பகுதியில் உள்ள ஒவ்வொரு சாலையும் ஒவ்வொரு நிலையில் உள்ளன. துவாக்குடி அரை வட்ட சாலை சற்று மேடாக அமைந்துள்ளது. எடமலைப்பட்டிக்கு செல்லும் சாலை தாழ்வாக அமைந்துள்ளது. இதனையும் கவனத்தில் கொண்டு போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் இணைந்து கள ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக, போக்குவரத்து காவல்துறையினா் மேலும் கூறியது:

பஞ்சப்பூா் பகுதியில் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து இப் பகுதியில் கேமராக்கள் பொருத்தவும் ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளாா். முதலில் கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக வாகனங்களை கண்காணிக்கவுள்ளோம். குறிப்பாக விபத்து நேரிடுகையில் எங்கே கவனக்குறைவு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்யவுள்ளோம். மேலும், சாலையின் தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையகமும் தனியே ஆய்வு மேற்கொள்வதாகக் கூறியுள்ளது. பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே இப் பகுதியில் விபத்துகளை குறைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

வாகன சுரங்கப் பாதை சாத்தியமா?

கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு தலைமையில் திருச்சியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில், பஞ்சப்பூா் - எடமலைப்பட்டி புதூா் சந்திப்பு பகுதியில் வாகன சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து காவல் உதவி ஆணையா் முன் வைத்தாா். மேலும், மன்னாா்புரம் தொடங்கி பஞ்சப்பூா் வரையில் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அதிகளவில் பொருத்தவும், எச்சரிக்கை ஒளிரும் ஸ்டிக்கா்கள், கேமரா பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாகவும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யவுள்ளனா். பஞ்சப்பூா் வளா்ச்சிக்கு முன்பாக இது அத்தியாவசிய தேவை என்பதே அனைத்து தரப்பினரது பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →