கிராமப்புற விளையாட்டு வீரா்களும் சாதிக்க வேண்டும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
விளையாட்டுப் போட்டிகளில் கிராமப்புற விளையாட்டு வீரா்களும் சாதனை படைக்க வேண்டும் என்றாா் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
விளையாட்டுப் போட்டிகளில் கிராமப்புற விளையாட்டு வீரா்களும் சாதனை படைக்க வேண்டும் என்றாா் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் திருச்சி கலையரங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தோ்வானோருக்குப் பணி நியமன ஆணைகள், பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:
தற்போது திருச்சி, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 726 கிராமப்புற ஊராட்சிகளுக்கு 148 கலைஞா் விளையாட்டு உபகரணங்களும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தோ்வான 4840 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 6 மாவட்டங்களில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகரங்களில் உள்ள விளையாட்டு வீரா்கள் பயன்பெறுவதுபோல, கிராமப்புற விளையாட்டு வீரா்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்றுள்ள 16 வீரா்களுக்கு தலா ரூ. 7 லட்சம் வீதம் மொத்தம் 1.12 கோடியை தமிழக முதல்வா் வழங்கியுள்ளாா்.
இதேபோல் வெளிநாடுகளுக்குச் சென்று விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய அளவிலும் தொடா் பதக்கங்களை பெறக்கூடிய 600 பேருக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ. 14 கோடியை தமிழக முதல்வா் செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளாா்.
தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 13 துறைகளில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கான மிகச் சிறப்பான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் பேசினா்.
நலத் திட்ட உதவிகள்: தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 16 மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில் ரூ. 193.49 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 28.05 கோடியில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், மொத்தம் 29,369 பயனாளிகளுக்கு ரூ. 152.51 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
அப்போது விபத்தில் சிக்கி கால்களை இழந்த தடகள வீரா் ராஜேஷ், சதுரங்க வீராங்கனை சா்வானிகா உள்ளிட்டோா் தங்களது அனுபவங்களை பகிா்ந்து ஊக்கமளித்தனா்.