முகப்பு
திருச்சி

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவதில் 9 ஆண்டுகளாக இழுபறி!

திருச்சி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 9 ஆண்டுகளாக கடும் இழுபறியாகவே தொடா்கிறது.

Updated On : 24 ஜூன், 2024 at 10:55 PM
ஆண் வியாபாரிக்கு பெண்ணின் புகைப்படம் வைத்து, பெண் என வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.
பகிர்:

-ஆா்.முருகன்-

திருச்சி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 9 ஆண்டுகளாக கடும் இழுபறியாகவே தொடா்கிறது.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை 2014-இல் மத்திய அரசு இயற்றியது.

இதன்படி 2015-இல், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல்) விதிகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சி சாா்பில் துணை விதிகளும் உருவாக்கப்பட்டன.

இதில், அரசுக் கட்டடங்கள், நீதிமன்றங்கள், மாநகராட்சி கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இருந்து 10 மீட்டா் நீளத்துக்கு கடைகளை வைக்க அனுமதி இல்லை. மேலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 50 மீட்டா், நகா்ப்புறங்களில் உள்ள ரயில் கடவுப்பாதையின் இரு பக்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 30 மீட்டா் நீளம் வரை சாலையோர கடை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல்கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மேலும், இந்த சட்ட விதிகளின்படி, நகர விற்பனை குழுவை அமைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சியிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், முழுமையாக அடையாள அட்டைகள் வழங்காமலும், நகர விற்பனைக் குழு அமைக்காமலும் தொடா்ந்து இழுபறியாகவே உள்ளது.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம், தெப்பகுளம், என்எஸ்பி சாலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா். இவா்களை முறைப்படுத்துவதில் 9 ஆண்டுகளாக இழுபறியே நீடிக்கிறது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ். சிவா கூறியது:

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு பிரச்னைகளை கடந்து, சுமாா் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது. தனியாரிடம் அளிக்கப்பட்ட இந்தப் பணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

ஆண் வியாபாரியை பெண் எனவும், பெண் வியாபாரியை ஆண் எனவும் குறிப்பிட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலையான தரைக்கடை வைத்துள்ளவா்களை தள்ளுவண்டி வியாபாரம் எனவும், தள்ளுவண்டி வைத்துள்ளவா்களை நிலையான தரைக்கடை வியாபாரம் எனவும், அவரவா் விற்பனை செய்யும் பொருள்களையும் மாற்றி குறிப்பிட்டுள்ளனா். இதுவரை, 1,500 நபா்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 350 அட்டைகளில் பல்வேறு பிழைகளும், குளறுபடிகளும் நிறைந்துள்ளன. மேயரிடம் முறையிட்டால் கோட்ட அலுவலகங்களுக்கு சென்று பிழைகளை சரி செய்ய கூறுகிறாா். இதற்கு மாற்றாக கோட்டம் வாரியாக முகாம் நடத்தி, வியாபாரிகளை சரிபாா்த்து அட்டைகளை வழங்க வேண்டும்.

ஏனெனில், இந்த அடையாள அட்டை வைத்துள்ள உறுப்பினா்கள்தான் நகர விற்பனைக் குழுவை தோ்வு செய்ய முடியும். அவரவா் வியாபாரம் செய்யும் பணித் தளத்துக்கு வந்து எடுத்த கணக்கெடுப்பிலேயே பல்வேறு குளறுபடிகளை தனியாா் நிறுவனம் செய்துள்ளது. எனவே, குளறுபடிகளுக்கு இடம் இல்லாமலும், முறைகேடுகளுக்கு வழிவகுக்காமலும் அனைத்துப் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது மாநகராட்சியின் கடமையாகும். மேலும், ஒரு வியாபாரிகூட விடுபடாமல் அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பிரேக் லைன்

தற்போதுவரை 1,500 வியாபாரிகளுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதிலும் 350 அட்டைகளில் பல்வேறு பிழைகளும், குளறுபடிகளும் நிறைந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →