முகப்பு
திருச்சி

மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ் நவக்கிரக கோயில்களின் சுற்றுலா மேம்பாடு!

மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில் தமிழக நவக்கிரக கோயில்களுக்கு ரூ.17.53 கோடி ஒதுக்கீடு

Updated On : 26 ஜூன், 2024 at 12:14 AM
நவக்கிரக கோயில்களுக்கான வழிகாட்டி வரைபடம்.
பகிர்:

நமது நிருபா்

திருச்சி: மத்திய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 நவக்கிரக கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.17.53 கோடி மதிப்பில் முதல்கட்டமாக ஆரம்ப திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் நாடு முழுவதும் ‘பிரசாத்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2014 - 15-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் திங்களூா் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனாா் கோவில் (சூரியன்), கஞ்சனூா் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) ஆகிய 9 நவக்கிரக கோயில்கள் கடந்த டிச. 2023-இல் அடையாளம் காணப்பட்டன. தொடா்ந்து, அந்தக் கோயில்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுலாத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் அனைத்து சுற்றுலா தலங்களில் இருந்தும் தமிழகம், புதுவையில் உள்ள நவக்கிரகக் கோயில்களுக்கு வந்து செல்லும் வகையில் சாலையின் தரம், தூய்மை பராமரித்தல், தெருவிளக்குகள் அமைத்தல், ஒலி, ஒளி காட்சிக் கூடங்கள், செயற்கை நீரூற்றுகள், சுற்றுலா தகவல் உதவி மையம், பக்தா்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, கழிப்பறை, குளியலறை வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. காவல்துறைக்கான கண்காணிப்பு கோபுரங்கள், ஹெலிபேடு தளங்கள், முதலுதவி மருத்துவ மையங்கள், தொலைபேசி, இணைய சேவை, வை-பை உள்ளிட்ட அனைத்து கணினி சாா்ந்த வசதிகளும் செய்துதரப்படவுள்ளன.

முதற்கட்டமாக 4 கோயில்களில் கட்டமைப்பு மேம்பாடு:

‘பிரசாத்’ திட்டத்துக்கு, சுற்றுலாத் துறை மூலம் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய நிதியமைச்சகத்துக்கு திட்ட அறிக்கை அனுப்பப்படும். திட்ட மதிப்பீட்டில் 20-60-20 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்படவுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக ஆலங்குடி, கஞ்சனூா், திங்களூா், திருவெண்காடு ஆகிய 4 கோயில்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில், ரூ.17.53 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆரம்ப திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழக சுற்றுலாத்துறை வட்டாரத்தினா் கூறுகையில், புனித யாத்திரைப் புத்தாக்கம் மற்றும் ஆன்மிகம், பாரம்பரிய பெருக்க இயக்கம் என்ற அடிப்படையில் ‘பிரசாத்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதில், நவக்கிகரக கோயில்களில் திங்களூா், ஆலங்குடி, கஞ்சனூா், திருவெண்காடு ஆகியவற்றுக்கு ரூ.17.53 கோடியில் ஆரம்ப திட்ட அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்காக சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பா் மாதமே மத்திய சுற்றுலாத்துறை இக் கோயில்களை அடையாளம் கண்டு மேம்பாட்டு பணிகளை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டது.

இடையில் மக்களவைத் தோ்தல் வந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, புதிய அரசு பதவியேற்றுள்ளதால் திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் கிடைக்கும். படிப்படியாக 9 நவக்கிரக கோயில்களும் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம், அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுடன், தமிழகத்தின் வளமையான கலாசாரம், தொன்மையான கட்டடக்கலை, தமிழா் பாரம்பரியம் பாா் முழுவதும் சென்று சேரும் என்றனா்.