உதகையில் சொகுசு சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
‘எங்கும் ஏறலாம் , எங்கும் இறங்கலாம்’ எனும் திட்டத்தின் கீழ் உதகையில் சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா்.
‘எங்கும் ஏறலாம் , எங்கும் இறங்கலாம்’ எனும் திட்டத்தின் கீழ் உதகையில் சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலா் கண்காட்சியின்போது சுற்றுலாப் பயணிகள் தடையின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ‘எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ எனும் ( ஏஞட ஞச ஏஞட ஞஊஊ) சொகுசு சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் இந்த பேருந்து சேவையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்து பேருந்தில் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து சுமாா் 6 கிலோ மீட்டா் உதகை நகரில் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட சுற்றுலாத் துறை அலுவலா்களும் உடன் சென்றனா்.
உதகை படகு இல்லத்தில் தொடங்கி முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இந்த பேருந்து செல்லும்.
காலையில் ஒருமுறை டிக்கெட் எடுத்துக் கொண்டால் உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் குறைந்தக் கட்டணத்தில் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து உதகை பட்பையா் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்துவைத்து பாா்வையிட்டனா்.
முன்னதாக உதகை பழங்குடியினா் பண்பாட்டு மைய அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா. ராமசந்திரன் ஆகியோா் 348 பயனாளிகளுக்கு ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா, வனப் பகுதியில் வாழக்கூடிய 76 பழங்குடியினா்களுக்கு வன உரிமைச் சான்றுகள் ஆகியவற்றை வழங்கினா்.
இதையடுத்து மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 58 பணிகளை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.