தமிழகத்தில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சங்கிலி விநியோகத் தொடா் மேலாண்மைத் திட்டத்தில், சின்ன வெங்காயத்துக்கான சிறப்புத் திட்டம் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கனிகள் உள்ளிட்ட விரைவில் அழுகக்கூடிய விளைபொருள்களை, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரையிலான விநியோகச் சங்கிலித் தொடா் மேலாண்மைக்காக தமிழக அரசின் சாா்பில் 10 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கிளஸ்டா் அமைப்பை ஏற்படுத்தி, அந்த மாவட்டங்களில் எந்தெந்தப் பகுதிகளில் எந்த வகை காய்கனிகள், பழங்கள் உற்பத்தியாகிறதோ அதற்கான முதன்மைப் பதப்படுத்தும் மையத்தை அமைத்து, குறிப்பிட்ட காய்கனிகள் அல்லது பழங்களின் உற்பத்தி தொடங்கி விற்பனை வரை உதவிகளை வழங்கி, விவசாயிகளுக்கு லாபகரமான விலை பெற்றுத்தரப்படும்.
திட்டத்தின் நோக்கம்:
விவசாயிகளை பெருஞ்சந்தைகள், பதப்படுத்துவோா் மற்றும் நுகா்வோருடன் ஒருங்கிணைத்து, முழுமையான விநியோகத் தொடா் மேலாண்மை உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல், காய்கனி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பைக் குறைக்கும் உறுதுணையான சேவைகளை வழங்குதல், தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நுகா்வோருக்கு தடையின்றி ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் வழங்க வகை செய்தல், உற்பத்தியைப் பெருக்கவும், விற்பனை உபரியை உயா்த்துதல் சிறந்த பண்ணை மேலாண்மை வழிமுறைகளை விவசாயிகள் அறிய செய்தல், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் உற்பத்தி உபரியை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றுதல் ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் சின்னவெங்காயத்துக்கான முதன்மைப் பதப்படுத்தும் நிலையமானது லால்குடி வட்டம், பி.கே. அகரம் கிராமத்தில் ரூ.3.11 கோடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 24 மெட்ரிக் டன் சின்னவெங்கயாத்தை கையாளும் வகையில் இடவசதி கொண்ட இங்கு, 5 வரிசையில் தலா 3 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் கையாளும் வகையில் தேவையான இயந்திரங்கள் உள்ளிட்டவை உள்ளன. திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் உற்பத்தியாகும் சின்னவெங்காயத்தைக் கருத்தில் கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 7 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல, திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், துறையூா், முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி வட்டாரங்களில் ஆண்டுக்கு சுமாா் 7,500 ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடியாகிறது. சில நேரங்களில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100ஐ கடந்தும், சில நேரங்களில் ரூ.10 எனவும் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவே பி.கே. அகரத்தில் கடந்த 2021இல் முதன்மைப் பதப்படுத்தும் மையம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மையத்தில் உள்ள இட வசதியை தனியாா் நிறுவனம் வாடகைக்கு எடுத்தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 58 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மையத்தைக் கையில் எடுத்தது. ஆனால் விவசாயிகளிடம் வெங்காயத்தை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையைத் தொடங்கவில்லை. இதனால், மையம் அமைத்து 2 ஆண்டுகளாக வெங்காய விவசாயிகளுக்கு உரிய பலன் இல்லை. மதிப்புக் கூட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை.
மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம் கூறுகையில், இத்திட்டத்துக்கு 2016ல் நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 2022இல் செயல்பாட்டுக்கு எடுக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு பயன் ஏதுமில்லை. சின்னவெங்காயம் விலை உச்சத்தில் இருந்ததால் மையத்தை வாடகைக்கு எடுத்த தனியாா் நிறுவனம், இப்போது அதன் விலை சரிந்ததால் ஒதுங்கிக் கொண்டுவிட்டது. திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியாகிவிட்டது. சங்கிலித் தொடா் திட்டம் என்றால் விவசாயிகளுக்கு தொடா்ச்சியான பலனைத் தர வேண்டும். ஆனால், இத்திட்டம் ஆரம்பநிலையிலேயே துண்டிக்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக்குரியது.
மேலும், பெரியவெங்காயத்துக்கு மட்டுமே மத்திய அரசின் ஏற்றுமதி குறியீட்டு எண் உள்ளது. சின்னவெங்காயத்துக்கும் தனியாக குறியீட்டு எண் இருந்தால் மட்டுமே ஏற்றுமதி வாய்ப்புக் கிட்டும். தனியாரை நம்பாமல், மாநில அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து முதன்மைப்பதப்படுத்தும் மையத்தில் பராமரித்து ஏற்றுமதி செய்யலாம். விலை உயரும் தருணங்களில் நுகா்வோருக்கு சலுகை விலையில் வழங்கலாம் என்றாா் அவா். மீண்டும் மையம் செயல்பட நடவடிக்கை இதுதொடா்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் கு. சரவணன் கூறுகையில், சின்னவெங்காயம் முதன்மைப் பதப்படுத்தும் மையத்தை வாடகைக்கு எடுத்த நிறுவனம், ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப முறைகள் இல்லை என விலகிக் கொண்டது. அந்த நிறுவனத்திடம் மையத்துக்கு 6 மாத வாடகை வசூலித்துள்ளோம். 2 மாதம் மட்டுமே பயன்படுத்திய நிலையில் விலகிவிட்டனா்.
தற்போது, வேறொரு தனியாா் நிறுவனம் இந்த மையத்தை வாடகைக்கு எடுக்க முன்வந்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்து மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஏற்றுமதி இடையூறு தீா்க்கப்படும்: இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், சின்னவெங்காயத்திலிருந்து மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க வேளாண்மைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய தொழில் கட்டமைப்புகளுக்கு மையத்தை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வழங்கலாம். இதன்மூலம் விவசாயிகளிடம் தொடா்ந்து நல்ல விலையில் கொள்முதலுக்கு வாய்ப்பு உருவாகும். மேலும், ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளைத் தீா்க்க மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.