முகப்பு
திருச்சி

கிராம கோயில் பூசாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

Updated On : 3 மார்ச், 2024 at 12:11 AM
பகிர்:

அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து கிராம கோயில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சியில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோா் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நிா்வாக அறங்காவலா் வேதாந்தம் தலைமையிலும், விஎச்பி மாநிலத் தலைவா் ஆா்ஆா். கோபால்ஜி முன்னிலையிலும் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கிராம கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயா்த்தியும், ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள சுமாா் 14 ஆயிரம் கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கியும் உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எந்த வரையறையும் இல்லாமல் அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் கிராம கோயில் பூசாரிகளின் மறைவுக்கு பிறகு அச்சலுகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தை சீா்படுத்த வேண்டும். புதிய நலவாரிய குழுவை ஏற்படுத்த வேண்டும். பூசாரிகள் நல வாரியத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். அனைத்து கிராம கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு இப்போது ரூ.72 ஆயிரமாக உள்ளது. இதை ரூ.1.20 லட்சமாக உயா்த்த வேண்டும். ஓய்வுபெற்ற அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.