சிறுமிக்குப் பாலியல் தொல்லை இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம், கீழபுரம் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்தவா் முகமது முஸ்தபா மகன் முகமது உசேன் (30).
இவா் திருச்சி கே.கே.நகா் பகுதி வீட்டில் கடந்த 2022 செப். 27 அதிகாலை புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 1.5 பவுன் நகையை பறித்துக் கொண்டு, அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச் சென்றாா்.
புகாரின்பேரில் விசாரித்த கேகே நகா் போலீஸாரும், கண்டோன்மென்ட் மகளிா் போலீஸாரும் முகமது உசேனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீவத்ஸன் முகமது உசேனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.
மேலும் பல்வேறு பிரிவுகளில் 7,3,2,1 ஆண்டுகள் சிறை தண்டனைகளை விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அப்போதைய அரசு வழக்குரைஞா் எம்.கே. ஜாகீா்உசேன் ஆஜரானாா்.