வந்தே பாரத் ரயில்களை தனியாருக்கு வழங்கக் கூடாது: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலா்
மத்திய அரசு தனியாா்மயக் கொள்கை மூலம் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றாா் எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என். கண்ணையா.
மத்திய அரசு தனியாா்மயக் கொள்கை மூலம் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றாா் எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என். கண்ணையா.
கரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் நடைபெறாத நிலையில், அத் தோ்தல் டிசம்பா் 4, 5, 6-களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும் சுமாா் 12.20 லட்சம் ஊழியா்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்கள் தயாராகி கூட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் எஸ்ஆா்எம்யு சாா்பில் திருச்சியில் உள்ள தொழிலாளா்களிடையே வாக்கு சேகரிக்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த கண்ணையா மேலும் கூறியது:
மத்திய அரசு டிராக் மீட்டா்களை 40% வரை குறைக்க வேண்டும், ரயில்வே துறையில் இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது எனவும் கூறிவருகிறது. ஆனால் இருப்பவா்களுக்கே வேலை பறிபோகும் நிலை உள்ளது.
தனியாா்மயத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. தனியாா்மயத்துக்கு முன் அதாவது பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோது ஐசிஎப்-ல் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும்போது ரயில்வே துறைக்கு ரூ.98 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டபோது ரஷ்ய நிறுவனத்துக்கு ரூ.130 கோடியும் மற்ற நிறுவனங்களுக்கு ரூ.200 கோடியும் வழங்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே 35 ஆண்டுகளுக்குப் பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்ற விதியும் இருப்பதால் ரயில்வே ஊழியா்களின் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே மத்திய அரசின் இந்த செயல்பாடுகளை எஸ்ஆா்எம்யு எதிா்ப்பதுடன் அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் அடுத்தகட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.