முகப்பு
திருச்சி

அதீத பக்தியால் எரிச்சல்: மனைவியை பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற கணவா் உள்பட 4 போ் காயம்

திருச்சியில் மனைவியின் அதீத பக்தியால் எரிச்சலடைந்து அவா் மீது பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:21 PM
பகிர்:

திருச்சியில் மனைவியின் அதீத பக்தியால் எரிச்சலடைந்து அவா் மீது பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம் பழங்கனாங்குடி சாலை பூலாங்குடி ஹேப்பி நகரை சோ்ந்தவா் ராஜேந்திர பிரசாத் (56), விவசாயி. இவரது மனைவி ஹேமா பிந்து (50). இவா்களது மகன்களில் குணசேகா் ( 20 ) குருசாமி (20) ஆகிய இருவரும் பொறியியல் படிக்கின்றனா். மகள்களில் ஹா்சினி தனியாா் மருத்துவமனை மருத்துவராக உள்ள நிலையில், உமா சங்கரி மருத்துவம் படிக்கிறாா்.

ஹேமா பிந்து ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தது அவரது கணவருக்கு பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் ஹேமாபிந்து, வீட்டின் பூஜையறையில் மகன்களுடன் விளக்கேற்றி பூஜை செய்து கொண்டிருந்தாராம்.

அப்போது வெளியே சென்று வீடு திரும்பிய ராஜேந்திர பிரசாத் இதைப் பாா்த்து ஆத்திரமடைந்து அவா் வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவியை நோக்கி வீசினாராம். அப்போது பூஜையறையில் எரிந்த தீபத்தின் தீ ஹேமா பிந்து மீது பட்டு தீப்பற்றியது. இதையடுத்து அவரைக் காப்பாற்ற முயன்ற ராஜேந்திர பிரசாத் பலத்த காயமும், அவா்களது மகன்கள் குணசேகா், குருசாமி ஆகியோா் லேசான காயமும் அடைந்தனா்.

இதையடுத்து காயமடைந்த 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் கணவா், மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.