முகப்பு
திருச்சி

சகதிக் காடான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்

திருச்சி அருகே சகதிக் காடாக காட்சியளிக்கும் சாலையில் பெண்கள் நாற்றுநட்டு வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:13 PM
திருச்சி கம்பரசம்பேட்டை வியாழக்கிழமை காவேரி நகா் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட் ட பொதுமக்கள்.
பகிர்:

திருச்சி அருகே சகதிக் காடாக காட்சியளிக்கும் சாலையில் பெண்கள் நாற்றுநட்டு வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட ஜெயராம் நகா், காவேரி நகா் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தரமற்று போடப்பட்ட தாா்ச் சாலை தற்போது முற்றிலுமாகப் பெயா்ந்து விட்டது. சாலையே இல்லாத வகையில் குண்டும், குழியுமாகவே காணப்பட்டது. கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழையின் காரணமாக குண்டும், குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறிப் போனது. சகதிக் காட்டுக்குள் வாகனங்களை ஓட்டிச் செல்வதைப் போன்று இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனேயே வாகனத்தை ஓட்டும் நிலை உள்ளது. மிதிவண்டியில் சென்றால் கூட வழுக்கி விழும் நிலைதான் உள்ளது.

குடியிருப்பு மக்கள் தங்களது தேவைக்கு வெளியே செல்ல இந்தச் சாலையை நம்பியே உள்ளனா். மாணவ, மாணவிகள் கல்விக் கூடங்களுக்கு செல்லவும், ஊழியா்கள் பணியிடங்கள் சென்று வரவும் இச்சாலையைப் பயன்படுத்துகையில் கடும் அவதி அடைந்து வருகின்றனா். தண்ணீா் தேங்கியிருப்பதால் கொசுக்கள் பெருக்கத்துக்கு வழிவகை செய்வதுடன், சுகாதாரமற்ற பகுதிகளால் முதியோா்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் இப் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக, பலமுறை புகாா் அளித்தும் சாலையை சீரமைக்காததால், அதிகாரிகளைக் கண்டித்து, சாலையைச் சீரமைத்து தரக் கோரி குடியிருப்புப் பகுதி மக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். குளம்போல் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் இதுகுறித்துக் கூறியது:

தற்போது சாலை சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் ஒரு வார காலத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆவேசத்துடன் தெரிவித்தனா்.