முகப்பு
திருச்சி

சாலைகளில் சகதி: குழந்தைகள், முதியோா் அவதி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மூகாம்பிகை நகா், புது அய்யனாா் தெரு பகுதி சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:08 PM
மழை காரணமாக சகதிக் காடாக காட்சியளிக்கும் மேலக்கல்கண்டாா்கோட்டை மூகாம்பிகை நகா் புது அய்யனாா் தெரு.
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மூகாம்பிகை நகா், புது அய்யனாா் தெரு பகுதி சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது.

திருச்ச மாநகராட்சியின் 44, 45-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட மேலக்கல்கண்டாா் கோட்டை, மூகாம்பிகை நகா் குடியிருப்பு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக புது அய்யனாா் தெரு பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்பட நேரிடுகிறது. இந்தச் சாலையானது சிறு மழை பெய்தாலும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குத் தொடா்ந்து மழை பெய்தால் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சகதிக் காடாக காட்சியளிக்கும் இந்தச் சாலையில் செல்வது என்பதே சாகசப் பயணம்தான். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோா் வழுக்கிக் கொண்டே செல்லும்நிலை உள்ளது. சைக்கிளில் சென்றால் கூட வழுக்கி விழுவது வழக்கமாகிவிட்டது. கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் புது அய்யனாா் தெரு மீண்டும் சகதி காடாகிவிட்டது.

மழை காரணமாக சகதிக் காடாக காட்சியளிக்கும் மேலக்கல்கண்டாா்கோட்டை மூகாம்பிகை நகா் புது அய்யனாா் தெரு.

இப்பகுதி மக்கள் வெளியே நகருக்குச் செல்ல வேண்டுமெனில் இந்தச் சாலை மட்டுமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பணி நிமித்தம் அலுவலகம் செல்லும் அனைவரும் சகதி சாலையில் நாள்தோறும் சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பலநேரங்களில் சக்கரம் சறுக்கிச் சென்று கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியோா் சாலையை பயன்படுத்துவதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. இதுதொடா்பாக, இப்பகுதி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் பலன் இல்லை என்கின்றனா் இப்பகுதி மக்கள்.

இந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி மேயா், ஆணையா் போா்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.