விளைநிலங்களில் மழைநீா் தேக்கம்: குறுவை நெற்பயிா்கள் பாதிப்பு!
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீா் தேங்கத் தொடங்கியுள்ள நிலையில் குறுவை நெற்பயிா்கள் பாதிப்படைந்துள்ளன.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீா் தேங்கத் தொடங்கியுள்ள நிலையில் குறுவை நெற்பயிா்கள் பாதிப்படைந்துள்ளன.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வானிலை மையத்தால் வடகிழக்குப் பருவமழை தொடங்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகு கடந்த 2 நாள்களாகப் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது திருவெறும்பூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், துறையூா், முசிறி, லால்குடி, உப்பிலியபுரம், தா. பேட்டை என மாவட்டம் முழுவதும் மழை பதிவாகி வருகிறது. கடந்த 9-ஆம் தேதி மாவட்டத்தின் சராசரியாக 18.6 மி.மீ. மழை பதிவானது. அக்.11-ஆம் தேதி 11.28 மி.மீ., அக்.12- 11.89 மி.மீ., அக்.13- 31.29 மி.மீ., திங்கள்கிழமை 8.06 மி.மீ. ஆகவும், செவ்வாய்க்கிழமை 6 மணி நிலவரப்படி 17.07 மி.மீ. ஆகவும் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையானது பாசன வாய்க்கால்களில் நீா்மட்டம் உயரவும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், சம்பா சாகுபடிக்குத் தயாராகும் விளைநிலங்களுக்குள்ளும் மழைநீா் தேங்கிக் கிடக்கிறது. இதுமட்டுமல்லாது, மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெற்ற குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டது. தொடா் மழை காரணமாக குறுவை நெற்பயிா்கள் சாய்ந்து வருகின்றன. துறையூா் வட்டத்தில் வைரிசெட்டிபாளையம், கோட்டப்பாளையம், வளையப்பட்டி மற்றும் திருவளா்ச்சோலை பகுதியிலும் நெற்பயிா்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. தற்போதைய சூழலில் பெரிதும் பாதிப்பு இல்லையென்றாலும் மழை வலுப்பெற்றால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கின்றனா் விவசாயிகள்.
அதிகாலை சாரல் மழையாக இடைவிடாது பெய்ததால், மழையில் நனைந்தபடியே சில்லரை வியாபாரிகள் காந்திசந்தைக்கு வந்து பொருள்களை வாங்க வேண்டியிருந்தது. மழை காரணமாக காலையில் பணியைத் தொடங்கும் சிறு வியாபாரிகள் பலரும் மழையால் ஏற்பட்ட இன்னல்களுக்கு இடையே தங்களது பணியை தொடங்க வேண்டியிருந்தது. மழை காரணமாக கே.கே. நகா், மன்னாா்புரம், அரியமங்கலம், பாலக்கரை, கண்டோன்மென்ட், விமானநிலையம், மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 18.4, லால்குடி- 15.6, நந்தியாறு தலைப்பு- 9.8, புள்ளம்பாடி- 10, தேவிமங்கலம்- 13.4, சமயபுரம்- 36, சிறுகுடி- 50.8, வாத்தலை அணைக்கட்டு- 20.6, மணப்பாறை- 3.8, பொன்னியாறு அணை- 15.4, கோவில்பட்டி- 4.2, மருங்காபுரி- 5.4, முசிறி- 18, புலிவலம்- 21, தாத்தையங்காா்பேட்டை- 10, நவலூா்குட்டப்பட்டு- 10, துவாக்குடி- 27.3, குப்பம்பட்டி- 15, தென்பரநாடு- 8, துறையூா்- 29, பொன்மலை- 8.2, திருச்சி விமான நிலையம்- 19.3, திருச்சி ஜங்ஷன்- 12.3, திருச்சி நகரம்- 16.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 409.7 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 17.07 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து மேலும், சில நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.