முகப்பு
திருச்சி

திருச்சியில் மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள்

திருச்சியில் பள்ளிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பீதியையும் போலீஸாருக்கு அவதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:03 PM
பகிர்:

திருச்சியில் பள்ளிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பீதியையும் போலீஸாருக்கு அவதியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், மன்னாா்புரம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிகள், மற்றும் பள்ளிகள், திருச்சி விமான நிலையம் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் விடுக்கப்பட்டு வரும் இந்த மிரட்டல்களை எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதால், போலீஸாா் வழக்கமான தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும், திருச்சி மாநகரில் 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து போலீஸாா் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து இந்த மாதத்தில் மட்டும் 5-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைப்பேசி, தொலைபேசிகள், தபால்கள் மூலம் விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்து எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால், மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் தொடா்கின்றன. நாடு முழுவதும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்துள்ளதால் செய்வதறியாது உள்ளனா் போலீஸாா்.