மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: துரை வைகோ எம்பி
மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்துக்கு பெருமளவு நிதி தொடா்ந்து குறைக்கப்படுகிறது என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.
மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்துக்கு பெருமளவு நிதி தொடா்ந்து குறைக்கப்படுகிறது என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.
திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம், குழுத் தலைவரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பெரம்பலூா் எம்.பி. அருண் நேரு, கரூா் எம்.பி. ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சாா்ந்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னா் துரை வைகோ எம்.பி. மேலும் கூறியது: குறிப்பாக ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பெருமளவு குறைத்துள்ளது. மேலும் 100 நாள்களுக்கு வேலை வழங்குவதே அரிதாகிவிட்டது.
மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் பெரிதும் தவறிழைத்து வருகிறது. இதுகுறித்து எம்பி-க்கள் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை.
இருப்பினும் மத்திய அரசின் நல்ல திட்டங்களைச் செயல்படுத்த, கடும் நிதிச் சுமையிலும் தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
விபத்துகளுக்கு கள ஆய்வு தேவை: திருச்சியில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து கருப்புப் பட்டியல் தயாரித்து அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் இணைந்து இதற்கான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
அடிப்படைக் கட்டமைப்புகளில் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் நடைபெற்ற ஷாா்ஜா விமான சம்பவம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஏற்பட்ட விமானக் கோளாறுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்துவோம் என்றாா் அவா்.
பெரம்பலூருக்கு ரயில்: பெரம்பலூா் எம்பி அருண் நேரு பேசுகையில், பெரம்பலூருக்கு ரயில் திட்டம் சாத்தியமே. ஏனெனில், 2 தொழிற்சாலைகள் வழங்கும் வேலையில் திட்டத்துக்கான மொத்த நிதியை குறைந்த காலத்தில் எடுத்து விடலாம். இத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை வழங்க ரயில்வே கோட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் கடிதம் கோரியுள்ளது. அதற்கான திட்ட அறிக்கையில் திட்டத்துக்கான சாதக, பாதகம் தெரிந்துவிடும். முடிவுக்கு 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.