அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்
அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களது மையத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு கூடுதல் கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.
அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களது மையத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு கூடுதல் கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இனாம்சமயபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீட்டின் கட்டுமானப் பணி, 15 ஆவது நிதிக் குழு மானியத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சிறுகனூா் ஊராட்சியில் சிறுகனூா் பொது நூலகக் கட்டட பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க அறிவுறுத்தினாா்.
இதன் தொடா்ச்சியாக, இருங்களூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். பின்னா் எதுமலை ஊராட்சி கால்நடை மருந்தகத்திலும், நியாயவிலைக்கடையிலும் ஆய்வு செய்தாா். இதையடுத்து பாலையூா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதில் முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தினாா்.
பின்னா், கரியமாணிக்கம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து, நோயாகளிடம் கலந்துரையாடினாா்.
ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.