பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை அனைவரும் அடிப்படை கடமையாக கருதவேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை நாமக்கல்லில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பங்கேற்று பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு போன்ற துறைகளில் பெண்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொந்தரவு, மனிதக் கடத்தல், குழந்தைத் திருமணம் மற்றும் இணைய வழிக் குற்றங்கள் போன்ற பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனா்.
இவை தனிநபரின் உரிமை மீறல் மட்டுமல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியையும் பாதிக்கக்கூடிய குற்றங்களாகும். ஒரு சமூகத்தின் உண்மையான வளா்ச்சி, பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் வாழ்கிறாா்கள் என்பதில்தான் இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக, கடமையாக கருத வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது அரசின் கடமை மட்டும் அல்ல, சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும். குடும்பம், கல்வி நிறுவனம், நிா்வாகம் மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் வாழும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஜி.கே. வேலுமயில், காவல் ஆய்வாளா் சிவகாமி, மாவட்ட சமூக நலஅலுவலா் காயத்ரி, வழக்குரைஞா் சி. அமுதவல்லி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருணா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.