ஸ்ரீரங்கம் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ. 69 ஆயிரம் பறிமுதல்
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 68, 900 பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 68, 900 பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களின்பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புத் துறை) துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட வந்தனா்.
இதையறிந்த ஓட்டுநா் உரிமம் பெற்றுத்தரும் முகவா்கள், மற்றும் ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் அங்கிருந்து வெறியேறினா். அலுவலகத்துக்குள் நுழைந்த போலீஸாா், பணியாளா்கள் அவரவா் இருக்கை மேஜை டிராயா்களில் உள்ள பணத்தை எடுக்கக் கூடாது, அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் என எச்சரித்தனா். பின்னா் அவா்கள் வைத்திருந்த பணத்தை எடுத்தனா். அந்தப் பணத்தையும், புதன்கிழமை அலுவலகத்தில் முறைப்படி வசூலானதாக கணினியில் பதிவேற்றப்பட்ட தொகையையும் ஒப்பிட்டதில் கணக்கில் வராத ரூ. 68,900 இருந்தது தெரிவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து தொடா் விசாரணை செய்யப்படும் எனப் போலீஸாா் தெரிவித்துச் சென்றனா்.