நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை? போலீஸாா் விசாரணை
திருச்சியில் வியாழக்கிழமை இரவு முள்புதரில் சடலமாக கிடந்த மூதாட்டி நகைக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சியில் வியாழக்கிழமை இரவு முள்புதரில் சடலமாக கிடந்த மூதாட்டி நகைக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி, கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள்புதரில் மூதாட்டி ஒருவா் ரத்தகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் கிராப்பட்டி, முஸ்லிம் தெருவைச் சோ்ந்த சவுரிநாயகம் மனைவி யாகுல மேரி (88) எனவும், அவா் புதன்கிழமை மாலை மற்றொரு மூதாட்டியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவா் எனவும் தெரியவந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது காதில் இருந்த தங்கத் தோடுகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன. தலையிலும் ரத்த காயங்கள் இருந்தன. எனவே நகைக்காக அவா் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.