காவிரி, கொள்ளிடத்தில் 4.50 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 4.50 லட்சம் மீன் குஞ்சுகள், நன்னீா் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில் புதன்கிழமை இருப்பு செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 4.50 லட்சம் மீன் குஞ்சுகள், நன்னீா் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில் புதன்கிழமை இருப்பு செய்யப்பட்டன.
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், ஆறுகளில் நாட்டு இன நன்னீா் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தலைச் செயல்படுத்திட ஏதுவாக நிதி ஒதுக்கி நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நாட்டு இன மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்தியப் பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிா்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு மேட்டூா் அணை, பவானிசாகா், தஞ்சாவூா் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, விரலிகளாக வளா்க்கப்பட்டு மொத்தம் 40 லட்சம் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆறுகளில் இருப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
2024-25ஆம் ஆண்டுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பை நம்பியுள்ள உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடவும், அழிந்துவரும் நாட்டு இன மீன் இனங்களைப் பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி முக்கொம்பில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றிலிருந்து சினை மீன்கள் சேகரிக்கப்பட்டு, அரசு மீன் உற்பத்தி நிலையங்களான தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அவை விரலிகளாக வளா்க்கப்பட்டு, தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 4.50 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இன கெண்டை மீன்களின் இருப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம் உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்படும். இதன்படி, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 4.50 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், எம். பழனியாண்டி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் (திருச்சி மண்டலம்) இரா. ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் மு. குமரேசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.