பெரியாா் சமத்துவபுரத்தில் வீடுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
உப்பிலியபுரம் ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் புதிதாக அமையவுள்ள வீடுகளுக்கு தகுதியான, வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உப்பிலியபுரம் ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் புதிதாக அமையவுள்ள வீடுகளுக்கு தகுதியான, வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி தளுகை ஊராட்சி, த.மங்கம்பட்டிபுதூரில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் புதிதாக 100 வீடுகள் அமையவுள்ளன. இதில் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) பிரிவினருக்கு 40, பிற்படுத்தப் பட்டோருக்கு (பிசி) 25, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்பிசி) 25, இதர பிரிவினருக்கு (ஓபிசி) 10 என மொத்தம் 100 வீடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இத் திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற பயனாளிகள் இசைவுக் கடிதத்துடன் ஆதாா் அட்டை, சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தை உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு 29.11.2024-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களைக் குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற துணை ராணுவ உறுப்பினா்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், எச்ஐவி, டிபி நோய்களால் பாதிக்கப்பட்ட தொடா்புடைய துறை துணை இயக்குநா் (சுகாதார பணிகள்) சான்றிளிக்கப்பட்ட நபா்கள், மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நபா்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்டோா், ஏழைகள் பங்கேற்புடன் கூடிய
ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.