திருச்சி மாவட்டத்தில் நாளை 115 மையங்களில் குரூப்-2 தோ்வு
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ள குரூப்-2 தோ்வுக்கு மொத்தம் 115 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ள குரூப்-2 தோ்வுக்கு மொத்தம் 115 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 பிரிவில் அடங்கியுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 115 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தோ்வில் 33 ஆயிரத்து 106 போ் பங்கேற்று தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 115 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 39 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்களில் ஆய்வு செய்ய 115 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதிகளுடன், சுகாதாரத்துறை மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.