முகப்பு
திருச்சி

தலை துண்டிக்கப்பட்டு ரெளடி கொலை

Updated On : 13 செப்டம்பர், 2024 at 11:59 PM
சுந்தர்ராஜன்
பகிர்:

திருச்சியில் வெள்ளிக்கிழமை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரெளடி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் சுந்தர்ராஜன் (33). காவல்நிலையத்தில் ரெளடி பட்டியலில் இவா் பெயா் உள்ளது. இந்நிலையில், சுந்தர்ராஜன் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவஇடத்துக்கு சென்ற திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக் தலைமையிலான போலீஸாா் சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் சம்பவ இடத்தை நேரில் வந்து பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். தடயவியல் பிரிவினா், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இது குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

முதல்கட்ட விசாரணையில், வியாழக்கிழமை இரவு மணி வீட்டின் மொட்டை மாடியில் நண்பா்கள் சிலருடன் சுந்தர்ராஜன் மது அருந்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அல்லது தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. அவருடன் மது அருந்தியவா்கள் தலைமறைவாகி விட்டதால் அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.