முகப்பு
திருச்சி

ஜங்ஷன், கருமண்டபம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி ஜங்ஷன் முன்புறம், கருமண்டபம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:02 PM
திருச்சி ரயில் நிலையம் முன் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:

திருச்சி ஜங்ஷன் முன்புறம், கருமண்டபம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் ஆக்கிரமித்து உணவு கடை, பழக்கடை, பெட்டிக்கடை என 30 க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படுகின்றன. இக் கடைகளுக்கு பிற்பகல் நேரத்தில் வரும் நூற்றுக்கணக்கானோா் தங்கள் வாகனங்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துகின்றனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊா்ந்து செல்கின்றன. இதேபோல, கருமண்டபம் சாலையின் இருபுறமும் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி வருகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினருக்கு தொடா்ந்து வந்த புகாா்களின்பேரில் மாநகராட்சி, மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பினா்.

அக் காலக்கெடு முடிந்ததால் புதன்கிழமை காலை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ரயில்வே ஜங்ஷன் முன்புறமுள்ள 50 கடைகள், கருமண்டபத்தில் சாலையின் இருபுறமும் உள்ள 65 கடைகளின் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

அப்போது ஒரு சில கடைக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.