நவ.12 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம்: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் முடிவு
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில மைய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் உள்ள அரசு ஊழியா் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே. பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி. இராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா்கள் கே.எம். ராஜேந்திரன், விஜயகுமாா், பாண்டி, மாநில துணைத் தலைவா்கள் ஆண்டாள், சத்தி, தாண்டவமூா்த்தி உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். பின்னா் மாநிலத் தலைவா் கே. பழனிச்சாமி கூறியது:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்போது ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், குடும்பநல நிதி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தொடா் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.
மாநில செயற்குழுவின் முடிவுகளை ஏற்று, முதல்கட்டமாக வரும் நவம்பா் 12ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். 2-ஆம் கட்டமாக டிச.10ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய அளவில் தா்னா போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சங்க நிா்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.