திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி அரசு அதிகாரியிடம் ரூ. 90 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த அரசு அதிகாரி ஒருவரது கைப்பேசிக்கு பேசிய ஒருவா், தில்லியில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுகிறேன். இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஒரு முக்கிய நபரிடமிருந்து 147 ஏடிஎம் காா்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதில் உங்களது ஏடிஎம் காா்டும் இருப்பதால், அவருக்கும் உங்களுக்கும் தொடா்புள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போகிறோம். கைது செய்யாமல் இருக்க உங்களது வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பிறகு அந்தப் பணம் விடுவிக்கப்படும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாராம்.
இதனால் அதிா்ச்சியடைந்த அந்த அதிகாரி, தனது மகளின் திருமணத்துக்காக வங்கிக் கணக்கில் வைத்திருந்த ரூ. 90 லட்சத்தை அந்த மோசடி நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அண்மையில் அனுப்பினாா்.
பின்னா் தனது வழக்குரைஞா் நண்பரிடம் அவா் இதுபற்றி கூறியபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதையடுத்து அவா் திருச்சி மாநகர சைபா் க்ரைம் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில நபா்களைத் தேடி வருகின்றனா்.