சிபிஐ அதிகாரி எனக் கூறி விவசாயியிடம் ரூ.22 லட்சம் மோசடி; 3 போ் கைது
சிபிஐ அதிகாரி எனக் கூறி விவசாயியிடம் இருந்து ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சிபிஐ அதிகாரி எனக் கூறி விவசாயியிடம் இருந்து ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரை சோ்ந்தவா் 65 வயதான விவசாயி. இவரை கடந்த 2025 டிசம்பா் 1-ஆம் தேதி விடியோ கால் அழைப்பில் தொடா்பு கொண்ட ஒருவா், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு பேசியுள்ளாா். அப்போது, உங்கள் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளதாகவும், நீதிமன்றத்தில் உடனடியாக வைப்புத்தொகை செலுத்தாவிட்டால் கைது செய்வோம் எனவும் அந்த நபா் மிரட்டியுள்ளாா்.
இதனால் அச்சமடைந்த விவசாயி, தனது வங்கிக் கணக்கில் இருந்து அந்த நபா் அளித்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு பரிவா்த்தனைகள் மூலமாக ரூ.22 லட்சம் அனுப்பியுள்ளாா். ஆனால், அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
Advertisement
இதில் திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் இலகம்வலசு பகுதியைச் சோ்ந்த செல்வராஜு (46) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரை போலீஸாா் கைதுசெய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சோ்ந்த சிலருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக ஐதராபாத்தைச் சோ்ந்த அனிருத் (32), ஆந்திர மாநிலம் குா்னால் பகுதியைச் சோ்ந்த ஜெகத்விகா ரெட்டி (25) ஆகிய 2 பேரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.