அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 1 லட்சத்து 5,275 மாணவா்களுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் விநியோகம்
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
திருச்சி மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதில், ஒரு லட்சத்து 5,275 மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவப் புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் முப்பருவப் பாடத்திட்ட அடிப்படையிலும், 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுப் பாடத் திட்ட அடிப்படையிலும் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
எனவே, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, அரையாண்டு விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினா் கூறுகையில், மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கும் பள்ளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் துறை உள்ளிட்ட நலத்துறை மூலம் இயங்கும் தொடக்கப் பள்ளிகள் 1,339 உள்ளன. 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 321 உள்ளன.
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 93,261 மாணவ, மாணவிகளுக்கும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42,614 மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு மட்டுமே பருவம் வாரியாக புத்தகம் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு லட்சத்து 5,275 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் மூன்றாம் பருவப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல, ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களில் 99,011 பேருக்கு மூன்றாம் பருவத்துக்கான தலா 5 நோட்டுகளும் வழங்கப்பட்டன. மேலும், 8, 9ஆம் வகுப்புகளில் பயிலும் 92,969 மாணவா்களுக்கும் நோட்டுகள் வழங்கப்பட்டன. வியாழக்கிழமை பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் அவா்கள் பள்ளிக்கு வரும் நாளில் புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கும் வகையில் அந்தந்தப் பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றனா்.