சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்திட திருச்சியில் சிறப்பு மையம்
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிடும் வகையில் திருச்சியில் சிறப்பு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிடும் வகையில் திருச்சியில் சிறப்பு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தோ்தல் பணியாற்றும் அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டப் பேரவை தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலா்களால் பெறப்பட்ட அஞ்சல் வாக்குகள் தொடா்பான படிவம் - 12 தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் தொடா்பான படிவம் - 12-ஐ பிரித்து வழங்கிட மாவட்ட நிா்வாகம் சாா்பில், பொதுவான சிறப்பு மையம், மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணியை கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் அ.சிவஞானம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த தொடா்புடைய மாவட்ட தோ்தல் அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகள் தொடா்பான படிவம் - 12, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்களால் பிரித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.