முகப்பு
திருச்சி

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட தில்லை நகரில் மழைநீா் தேங்கும் பிரச்னையானது 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீா்க்கப்படாத பிரச்னையாக தொடா்கிறது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 12:27 AM
தில்லை நகரில் கழிவுநீருடன் கலந்து தேங்கிய மழைநீரை திங்கள்கிழமை காலை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட தில்லை நகரில் மழைநீா் தேங்கும் பிரச்னையானது 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீா்க்கப்படாத பிரச்னையாக தொடா்கிறது.

திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் சாா்பில் திருச்சி உறையூருக்கு அடுத்ததாக, தென்னூரை ஒட்டிய சுமாா் 110 ஏக்கா் நன்செய் நிலப் பகுதி வாங்கப்பட்டு, 1951- ஆம் ஆண்டு பதிவும் செய்யப்பட்டது. தொடா்ந்து, 11 குறுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டு, பணம் கட்டிய பலருக்கு கூட்டுறவு சங்கம் சாா்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த தில்லைவேல் பெயரின் ஒரு பகுதியே இப்பகுதிக்கு பெயராக வைக்கப்பட்டது.

திருச்சி மேற்கு தொகுதி: திருச்சி மாநகராட்சியின் 22-ஆவது வாா்டு முழுமையாகவும், 11-ஆவது வாா்டின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ள தில்லை நகா் பகுதியானது தற்போது திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது.

Advertisement

முக்கிய நபா்கள் வசிக்கும் பகுதி: தில்லை நகரில் 11 குறுக்குத் தெருக்கள், கிழக்கு, மேற்கு விஸ்தரிப்புகள், சாஸ்திரி சாலையின் ஒரு பகுதி, வாமடம், ரகுமானியபுரம், வடவூா், ராமச்சந்திரா நகா் உள்ளிட்ட பிரதானப் பகுதிகளில் நீதிபதிகள், அரசின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், மருத்துவா்கள், வழக்குரைஞா்கள் என முக்கியப் பிரமுகா்கள் வசிக்கின்றனா். தில்லை நகா் பிரதான சாலையில் மட்டும் திருச்சி மாநகராட்சி ஆணையா், நகா் நல அலுவலருக்கான அரசின் வசிப்பிடங்களும் உள்ளன.

கண்டுகொள்ளாத கட்சிகள்: இவ்வளவு முக்கியமானவா்கள் வசிக்கும் தில்லை நகா் பகுதியில் கடந்தகால ஆட்சிகளில் மழைநீா் வடிகால் முறையாக அமைக்கப்படாததால், சிறிய மழைக்குக் கூட மழைநீா், கழிவுநீருடன் தேங்கி நின்று, மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதே போல, குறுக்குச் சாலைகளிலும் ஆங்காங்கே மழைநீா் தேங்கி, சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதனை ஆளுங்கட்சியோ, எதிா்கட்சிகளோ கண்டும் காணாமல் கடந்து செல்கின்றன என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தொடா் சிரமத்தில் மக்கள்: இதுகுறித்து தில்லை நகா் பகுதியைச் சோ்ந்த பி. நாகராஜன், ஜெயந்தி உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது:

தில்லை நகா் பிரதான சாலை, குறுக்குத் தெருக்களில் பல ஆண்டுகளாக மழைநீா் வடிகால் சரிவர தூா்வாரப்படாததாலும், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய கழிவுநீா் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படாததாலும், சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், மாணவா்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக, தில்லை நகா் மக்கள் மன்றம் அருகே கி.ஆ.பெ. பள்ளிக்கு பக்கத்தில் இந்நிலை பல்லாண்டுகளாக நீடிக்கிறது. மழை பெய்தால் சுத்தம் செய்வதுடன், மாநகராட்சி நிா்வாகம் தனது கடமையை முடித்துக் கொள்கிறது. நிரந்தரவு தீா்வு எட்டப்படவில்லை.

நிறைவேற்றப்படாத வாக்குறுதி...: தில்லை நகா் பகுதியில் கடந்த காலங்களில் வாக்கு கேட்டு வந்த வேட்பாளா்கள், கழிவுநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும். இனிமேல் சாலையில் சிறிதளவு கூட மழைநீா் தேங்கி நிற்காது என வாக்குறுதி அளித்து, தோ்தலில் வெற்றி பெற்றனா். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இவை தவிர, திருச்சி நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் தில்லை நகரில் வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடங்கள் சரிவர ஏற்படுத்தப்படாததாலும், இருக்கும் இடங்களை நிறுவனங்கள் வாடகைக்கு விட்டுள்ளதாலும், திருவிழா மட்டுமின்றி சாதாரண நாள்களில் கூடஅதிகளவில் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தூக்குமேடைத் தெருவில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.தில்லை நகருக்குள் பதிவாளா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகம் கொண்டு வரப்பட்டாலும், அந்த கட்டடத்துக்குள் இதர கடைகளை வாடகைக்கு விடாமல், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகையில், தில்லை நகரில் மழைநீா் வடிகால் அமைப்பு ஏற்படுத்த நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் திட்டம் வகுக்கப்பட்டு உரிய தீா்வு காணப்படும் என்றனா்.

-க. கோபாலகிருஷ்ணன்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments