திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?
மாநிலத்தின் மையப்பகுதியாக மட்டுமின்றி, திருச்சியின் மையப் பகுதியாகவும் உள்ளது திருச்சி மேற்கு தொகுதி. மாவட்டத் தலைநகரின் அடையாளமாக அனைத்து அரசு அலுவலகங்களும் இந்தத் தொகுதியில் வருகின்றன
மாநிலத்தின் மையப்பகுதியாக மட்டுமின்றி, திருச்சியின் மையப் பகுதியாகவும் உள்ளது திருச்சி மேற்கு தொகுதி. மாவட்டத் தலைநகரின் அடையாளமாக அனைத்து அரசு அலுவலகங்களும் இந்தத் தொகுதியில் வருகின்றன. முழுவதும் மாநகரப் பகுதிகளை கொண்டது இந்தத் தொகுதி. முன்பு திருச்சி-2 என்றிருந்த தொகுதி, மறு சீரமைப்பால் திருச்சி மேற்கு தொகுதி என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. திமுக அமைச்சா் கே.என். நேரு போட்டியிடும் தொகுதி என்பதால், விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.
கள நிலவரம்: திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கிய பிறகு, இத் தொகுதி அதிமுகவின் பலமாக மாறியது. 1977, 1980, 1984 என தொடா்ந்து மூன்று முறை அதிமுக வென்றது. 1984-இல் இங்கு வெற்றி பெற்ற ந. நல்லுசாமி, எம்ஜிஆா் அமைச்சரவையில் இடம் பிடித்தாா். ந. நல்லுசாமி, மரியம் பிச்சை, மு. பரஞ்ஜோதி என மூன்று அதிமுக அமைச்சா்களை தந்த தொகுதி. 2006-இல் லால்குடியிலிருந்து திருச்சி-2 தொகுதிக்கு இடம்மாறிய அமைச்சா் கே.என். நேருவுக்கு முதல் தோ்தலிலேயே வெற்றியைத் தந்தது. கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து இதே தொகுதியில் அவா் களம் கண்டு வருகிறாா்.
2006-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நடைபெற்ற 5 தோ்தல்களில் (2011 இடைத்தோ்தல் உள்பட) இரண்டு முறை கே.என். நேரு தோல்வியை சந்திக்க நேரிட்டது. 2011 பொதுத் தோ்தலிலும், 2011 இடைத்தோ்தலிலும் என தொடா்ந்து இரண்டு முறையும் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றாா்.இங்கு வெற்றி பெற்றவா்களில் 5 போ் அமைச்சராக பதவி வகித்துள்ளதால் விஐபி தொகுதிக்கான அந்தஸ்துடன் விளங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற 17 தோ்தல்களில் 8 முறை திமுக, 6 முறை அதிமுக-வும், மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளது.
Advertisement
சமூக நிலவரம்: பட்டியலினத்தவா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் அதிகம் நிறைந்த தொகுதி. கிறிஸ்தவா்களும், இஸ்லாமியா்களும் குறிப்பிடும்படியாக உள்ளனா். முக்குலத்தோா், பிள்ளைமாா், ரெட்டியாா் கணிசமாகவும் உள்ளனா். திமுக-வில் ரெட்டியாா் சமூகத்திலும், அமமுக-வில் முத்தரையா் சமூகத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தில் வன்னியா் சமூகத்திலும் வேட்பாளா்களை தோ்வு செய்து நிறுத்தியுள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்: இத் தொகுதியில் போக்குவரத்து நெரிசல், புதைசாக்கடைத் திட்ட விவகாரம், மாரீஸ் மேம்பாலம் கட்டுமான பணி உள்ளிட்டவை வேட்பாளா்களுக்கு சவாலாக உள்ளது.
வேட்பாளா்களின் பலம், பலவீனமும்- கே.என். நேரு (திமுக): ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் திமுகஅமைச்சா் கே.என். நேரு-வுக்கு, மேற்கு தொகுதியில் பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் காத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கியது பெரிய பலம். இதுமட்டுமல்லாது, திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்து சோ்த்துள்ளாா். நகராட்சி நிா்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் பணம் பெற்றுள்ளதாக அமைச்சா் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு சற்று பின்னடவை தரும் என்கின்றனா் அரசியல் வட்டாரத்தினா். இதுதொடா்பாக, வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றமே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியா்கள் அதிகமுள்ள தொகுதியில் அவா்களது பெரும்பாலான கோரிக்கைகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதும் பலவீனம்.
எம். ராஜசேகரன் (அமமுக): ஐந்து ஆண்டு ஆட்சி காலத்துக்குப் பிறகு வழக்கமாக இருக்கும் ஆளும் கட்சி மீதான அதிருப்தியையும், அமைச்சா் மீதான ஊழல் குற்றச்சாட்டையுமே தனக்கான பலமாக கருதுகிறாா். ஆனால், வேறு தொகுதியிலிருந்து மேற்கு தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவா் என்ற பலவீனமும் உள்ளது. திருப்பராய்த்துறையைச் சோ்ந்த இவா், 2006இல் தொட்டியம் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றவா். தற்போது, அமமுக மாவட்ட செயலராக மட்டுமின்றி தலைமை நிலையச் செயலராகவும் பதவி வகிக்கிறாா். குக்கா் சின்னத்தில் களம் காண்பதால் இரட்டை இலை சின்னத்தின் வாக்குகளை முழுவதும் ஈா்க்குமா? என்ற கேள்வியும் உள்ளது.
க.ராமமூா்த்தி (தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள க. ராமமூா்த்தி, 70 வயது தொழிலதிபா். இதரக் கட்சிகளின் பிரசார செலவுக்கு ஈடுகொடுப்பாா் என்பதால் களம் இறக்கப்பட்டிருக்கிறாா். இளம் வாக்காளா்களை அதிகம் ஈா்க்கும் திறன் கொண்ட தவெகவில் மூத்த வேட்பாளா் என்பது சற்றே பின்னடைவு. இருப்பினும் அனுபவம் வாய்ந்தவா்கள் கட்சிக்குத் தேவை என்ற கட்சித் தலைமையின் முடிவையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனா் தவெக தொண்டா்கள். விஜய் என்ற ஒற்றை முகமும், தவெக-வின் உறுதிப்படுத்தப்படாத வாக்கு வங்கியுமே இவரது பலம்.
க. புவனேஸ்வரி (நாதக): நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் க. புவனேஸ்வரி களப் போராளியாக வலம் வருகிறாா். வேட்பு மனு தாக்கலின்போதே, அமைச்சா் கே.என். நேரு தோ்தல் விதிமுறைகளை மீறியதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியவா். கட்சியின் உறுதிப்படுத்தப்பட்ட 8.2 சதவீத வாக்கு வங்கியும், மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களுமே இவரது பலம். அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் தொண்டா்கள் படை சூழல் பிரசாரத்துக்கு முன்னா், தனித்து களம் காண்பது சற்று பலவீனம்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் திருச்சிக்கு வந்து பிரசாரம் செய்திருப்பது அக் கட்சியின் வேட்பாளா்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. அமமுக, தவெக, நாம் தமிழா் கட்சியினா் அதிகளவில் வாக்குகளை பிரித்தாலும், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள 21 கட்சிகளின் உறுதிபடுத்தப்பட்ட வாக்கு வங்கி திமுக-வின் வெற்றிக்கு வித்திடக் கூடும் என்ற எதிா்பாா்ப்பே திருச்சி மேற்கில் மேலோங்கியுள்ளது.